19/02/2026
நான் கடந்து வந்த பாதைகள் உலகில் யாரும் தராத அனுபவங்களை தந்தது , அந்த அனுபவங்கள் சிறந்த பாடங்களை கற்று தந்துள்ளது.
இத்தனை நாட்களாக நான் பல மனிதர்களை சந்தித்து பழகினாலும் அவர்களில் சிலர் மட்டுமே எமக்கு அவர்களின் நினைவுகளை விட்டு செல்லுகிறார்கள்.
அந்த வகையில் அண்மையில் சந்தித்த ஒரு மனிதனை பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
நான் புதிதாக ஒரு கம்பனியில் இணைந்த பொழுது பலர் அறிமுகமாகி கொண்டிருந்தார்கள்.
வழக்கம் போல என் இருக்கைக்கு அருகில் ஒரு மனிதர், எல்லோருக்கும் சலாம் செய்து கொண்டே வந்தார், எனக்கும் சிரித்த முகத்துடன் சலாம் சொன்னார் நானும் பதிலுக்கு சொன்னேன்.
எனக்கு அந்த மனிதரின் நடவடிக்கை சற்று வித்தியாசமான ஒன்றாக இருந்தது, அவர் பேசும் ஆங்கிலம் பிரிட்டிஷ் ஸ்டைலில் இருந்தது.
அவர் ஒரு பொறியியலாளராக இருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் பேசும் ஆங்கிலம் வித்தியாசமான ஒன்றாகும்.
அப்போது இங்குள்ள பாசையில் சிலர் நலம் விசாரித்தார்கள், ஒருவர் வந்து வைத்திய பரிசோதனைக்கு சென்றாயா என்றார் இவரும் ஆம் எப்போதும் போல்தான் என்றார்.
அப்படி சொல்லும் போது அவரின் முகத்தில் அவ்வளவு அழகான புன்முறுவல், அந்த சிரிப்பு அவரை அழகாக மாற்றியது.ஆனால் அந்த கண்களில் ஏதோ ஒரு ஏக்கம் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.
எல்லோரும் போனதும் என் பக்கத்தில் இருந்த வேறொருவரிடம் இவருக்கு என்ன பிரச்சினை என்றேன்.
அவருக்கு புற்று நோய்,இறுதிகட்டம் என்றார்!
சத்தியமாக நான் தன்னிலை மறந்து போனேன், பயம் வந்துவிட்டது, பின்னர் சுதாரித்துக் கொண்டு என்னவென்று கேட்டேன், ஆறு மாதத்திற்கு முன்னர் வைத்தியர்கள் ஒரு வருட காலக்கெடு கொடுத்தார்களாம், இப்போது ஆறாவது மாதமாம் என்றார்.
அந்த மனிதனுக்கு தெரியுமாம் தன்னுடைய ஆயுள் எண்ணப்பட்டு கொண்டுள்ளது என்று,
ஆனால் வேலை செய்கிறார், அவரின் பேச்சில், அவரின் நடவடிக்கையில் அப்படி ஒரு அமைதி இருக்கும், அவ்வளவு மரியாதையாக பேசுவார்.
நானும் அவரும் சேர்ந்து இப்போது வேலைக்கான திட்டமிடலை கூட செய்து கொண்டிருக்கிறோம்.
நேற்று,வந்த மனிதன் வயிற்று வலி அதிகமாக இருப்பதாக கூறி சென்றுவிட்டார், இதுவரை காலமும் புற்றுநோயின் வேதனையை படங்களில் பார்த்த நான் நேற்று என் பக்கத்தில் ஒருவர் வலியால் துடித்ததை கண்டேன்.
இதை எழுதும் போதுகூட வாழ்வில் இருந்த அந்த பற்று இல்லாமல் கொஞ்சம் அமைதியாக இந்த வாழ்க்கை பற்றி யோசிக்காமல் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
நாம் எவ்வளவு காசு சேர்க்க வேண்டும் என்று வாழ ஆசைப்படுகிறோம், ஆனால் எப்படி சரி இந்த வாழ்க்கைய காப்பாற்ற மாட்டோமா? என்று ஒரு மனிதர் வாழுகிறார்.
இன்னும் எத்தனை நாட்களோ....
ஆண்டவனே....
எதற்காக எனக்கு இப்படி அனுபவங்களை தருகிறாய்!
நான் சீக்கிரம் உடைந்து போக கூடிய ஒருவன்,
ஆனால் இப்படி தனக்கு இருக்கிறது என்று தெரிந்தும் எதுவும் யோசிக்காமல் வந்து வேலை செய்யும் இவர்களின் மன தைரியம் எவ்வளவு பெரியதாக இருக்கும்.
நாம் இருக்கும் காலத்தை நிம்மதியாக வாழுவோம் அவ்வளவுதான்.
அந்த மனிதன் நீடூழி வாழட்டும்,
என் பிரார்த்தனை ஒரு ஆயுளை நாளை அவருக்கு அதிகமாக தரட்டும்!
Arun