08/03/2024
மயிலாடுதுறையில் மயூரநாட்டியாஞ்சலி தொடக்கம். முதல் நாள் நிகழ்வில் ஏராளமான நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் மயூரநாட்டியாஞ்சலி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 18-ஆம் ஆண்டு மயூரநாட்டியாஞ்சலிஅருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் தொடங்கியது. சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை தலைவர் பரணிதரன் வரவேற்புரையாற்றினார்.
அறக்கட்டளையின் அறங்காவலர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் சிவலிங்கம், அறங்காவலர்கள் செந்தில்வேல், பிச்சை கண்ணன், மருத்துவர் அருண்குமார், செந்தில்குமார், மதியழகன் மோகன்ராஜ், தொழிலதிபர்கள் சாந்தகுமார், பாஸ்கர், செந்தில்குமார், திருவாவடுதுறை ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன், ஆதீன புலவர் குஞ்சதபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,
தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் கவிதா ராமு, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மங்கள ஒளிவிளக்கு ஏற்றி மயூர நாட்டியாஞ்சலியை துவக்கி வைத்து வாழ்த்து வழங்கினர்.
தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நற்பணிகளை பாராட்டி சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் “மயூர நன்னெறி செம்மல்” என்ற விருதும், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் நாட்டிய கலைஞர் கவிதா ராமு ஐஏஎஸ் அவர்களுக்கு “மணிமேகலை பொற்சதங்கை”விருதும் ஆன்மீக திருப்பணிகளை சிறப்பாக செய்து வரும் மயிலாடுதுறை சௌ.விஜயகுமார் அவர்களுக்கு “மயூர நற்பணி நல்லரசு” என்ற விருதும் வழங்கப்பட்டது.
ஆலங்குடி ஏவி பக்கிசாமி நாதஸ்வர குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கிய முதல் நாள் மயூரநாட்டியாஞ்சலியில் மலேசியா லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி குழுவினர், சென்னை அனுஷம் டான்ஸ் குரூப் டான்ஸ் குழுவினர், ஸ்ரீ ஞான முத்ரா குழுவினர், கோயம்புத்தூர் கிருஷ்ணபிரியா உள்ளிட்ட குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வுகளை ஏராளமான கலை அலுவலர்கள் கண்டு ரசித்தனர். சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை செயலாளர் மாயவரம் விஸ்வநாதன் நன்றி கூறினார். துணை செயலாளர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.