19/05/2026
பெருங்குன்று - மலை அறிதல் நிகழ்வு
=================
மதுரை இயற்கை பண்பட்டு அறக்கட்டளை சார்பாக பண்பாட்டுச் சூழல் நடை மாதம் ஒரு ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இந்நடையில் பல்வேறு துறைசார் அறிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்று, கூடமிடத்தின் புவியியல், தொல்லியல், சூழலியல் செய்திகளை ஆவணம் செய்வர். அவ்வகையில் கடந்த 17.05.2026, ஞாயிறு அன்று காலை பண்பாட்டுச் சூழல் நடையின் 42வது நிகழ்வு மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டியில் அமைந்துள்ள தேவன்குறிச்சி மலையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வா, பாட்ரிக், தமிழ்தாசன்,; காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்கள் மரு. ஹிமோக்ளோபின், ஜோதிமணி, பாலகிருஷ்ணா, கேசவன், கௌதமா, சூழலியல் ஆர்வலர்கள் நிலா பாண்டியன், லட்சுமி, விளாச்சேரி சதிஷ்குமார், சக்திவேல், கமலேஷ், சீனிவாசன், பெரிய நல்லதம்பி, நீச்சல்காரன் ராஜா, ஹரிபிரசாத் ஆகியோர் பங்கெடுத்தனர். புவியியல் ஆய்வாளர் ஜா. முகம்மது ஹாரிஸ் அவர்கள் மலையின் தோற்றம், தேவன்குறிச்சி மலை பாறைகளில் காணப்படும் கனிமங்கள், அதை கண்டறியும் நுட்பம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். பண்பாட்டு சூழலியல் ஆய்வாளர் தமிழ்தாசன் தேவன்குறிச்சிமலையின் தொல்லியல் ஆய்வுகள், கோயில் கல்வெட்டு தரும் வரலாற்று செய்திகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
தேவன்குறிச்சி மலை, ஈஸ்வரப்பேரி கண்மாய் பகுதிகளில் காலை 7 முதல் 11 மணி வரை மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர் நிகழ்த்திய பல்லுயிரிய ஆய்வில் தேவன்குறிச்சி மலையில் சுமார் 30 வகை மரங்கள், 50 வகை பறவையினங்கள், 28 வகை வண்ணத்துபூச்சி இனங்கள், 6 வகை ஊர்வன மற்றும் 18 வகை பாலூட்டி வகை விலங்குகள் ஆவணம் செய்யப்பட்டது. புள்ளிமான்கள், முள்ளம்பன்றி, நரி, வெருகு, செம்முக குரங்கு, முள்ளெலி, கீரி, உடும்பு உள்ளிட்ட காட்டு விலங்குகளின் வாழிடமாக தேவன்குறிச்சிமலை விளங்குகிறது. தேவன்குறிச்சி மலையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு புலி இருந்தது என்பதன் அடையாளமாக புலியை கொன்ற வீரனின் நினைவாக எடுக்கபட்ட நடுகல் மலையின் அடிவாரத்தில் வழிபாட்டில் உள்ளது. பல்வேறு பருவ காலங்களில் விரிவாக ஆய்வு செய்தால், தேவன்குறிச்சிமலையின் உண்மையான பல்லுயிரிய வகைமையை அறிந்துக் கொள்ள முடியும்.
தேவன்குறிச்சி மலையில் 1976-77 ஆண்டில் நடைப்பெற்ற அகழாய்வுகளில் இடைக் கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன. மேலும் இரும்பு மற்றும் செப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்டங்கள், கல் மணிகள், வளையல்கள், முதுமக்கள் தாழிகள் போன்றவைகளும் கிடைத்துள்ளன.
தேவன்குறிச்சி மலையில் பொந்துபாறை என்னும் புடவில் வரலாற்றுக் காலதிற்கு முந்திய வெண்சாந்து குகை ஒவியங்களும், 2000 ஆண்டுகள் பழமையான மழைநீர் வடிகால் கொண்ட கற்படுக்கைகளும் காணப்படுக்கிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள சிவன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பிற்பாண்டியர் கால கல்வெட்டுகள் தமிழக தொல்லியல்துறையால் ஆவணம் செய்யபட்டுள்ளது. மலையின் வடக்கில் உள்ள ஈஸ்வரப்பேரி கண்மாயிலும் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சிவன் கோயில் கருவறைக்கு பின்புறத்தில் கிபி 10 ஆம் நூற்றண்டைச் சார்ந்த சமணத் தீர்த்தங்கர் சிற்பமும், கோயிலின் கிணற்றில் மகாவீரர் சிற்பமும் காணப்படுகிறது. 400 ஆண்டுகள் பழமையான புலிக்குத்தி நடுகல்லும் மலையடிவாரத்தில் வழிபாட்டில் உள்ளது.
800 ஆண்டுகள் பழமையான கோயில் கல்வெட்டுகளில் இருந்து தேவன்குறிச்சி மலையின் பெயர் பெருங்குன்று என்றும், அதன் அடிவாரத்தில் இருந்த ஊரின் பெயர் பெருங்குன்றூர் என்றும், ஈஸ்வரப்பேரி கண்மாயின் பெயர் பெரியகுளம் என்றும் அறிந்துக் கொள்ள முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குவாரி பணிகளால் மலையின் கிழக்கு பகுதி சிதைக்கபட்டுள்ளது.
சுமார் 1050 அடி உயரம் கொண்ட தேவன்குறிச்சி மலை தொல்லியல் அடிப்படையிலும் சூழலியல் அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்த மலையாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளைப் பாதுகாப்பதற்காக 2002-ம் ஆண்டு இயற்றப்பட்ட உயிரியற் பல்வகைமைச் சட்டம் (Biological Diversity Act, 2002) படி தேவன்குறிச்சி மலையையும், ஈஸ்வரப்பேரி கண்மாயையும் பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.
ஒளிப்படங்கள்: திரு. கௌதமா, பாலகிருஷ்ணா, விஷ்வா, கேசவன், சதிஷ்குமார், கமலேஷ், சக்திவேல், தமிழ்தாசன்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை