15/11/2021
நாம் எதையெல்லாம் கைவிட்டோமோ அவற்றின் குரலாக ஒலிப்பதுதான் பூபதியின் நாடகங்களும் எழுத்துகளும். அறிவின் அகங்காரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு, பித்துநிலையின் தீவிரத்தைப் பேசவல்லவை அவரின் நாடகங்கள். பித்துநிலையில் உள்ளவர்கள், நாடோடிகள், தெருப்பாடகர்கள், சபிக்கப்பட்டவர்கள், சொந்த நிலத்தில் வாழ முடியாமல் துரத்தப்பட்டவர்களின் ஓலங்களே அவரின் நாடகங்கள். பூமி, எல்லா உயிர்களுக்குமானதென்பதை நாம் திரும்பத் திரும்பப் பேசவேண்டியிருக்கிறது.
அறிவியலின் அகங்காரம் மனிதனைப் பேராசைமிக்கவனாகவும், எல்லாவற்றையும் சுரண்டக்கூடியவனாகவும் மாற்றிவிட்டிருக்கிறது.
அந்தச் சுரண்டலுக்கும் அகங்காரத்துக்கும் எதிராக உரத்துப் பேச நாடோடிகளாலும் பித்துநிலையில் உள்ளவர்களாலும் மட்டுமே முடியும்.
சடங்குகளை மறத்தலென்பது நமது அடையாளங்களிலிருந்து நம்மைத் துண்டித்துக்கொள்வதைப்போல துயரமானது. ஒரு இனத்தின் மொழி, சடங்கின் வழியாகத்தான் உயிர்ப்போடு நிலைத்திருக்கிறது. கதைப்பாடல்களின் வழியாகத்தான் மகத்தான வரலாற்றை நாம் இன்றைக்கும் நினைவில்கொண்டிருக்கிறோம். பின்லாந்தியர்கள் தங்களின் விடுதலைப் போராட்டத்தின் பெரும் அடையாளமாகக்கொண்ட `கலேவலா’ என்னும் வீரகாவியம் அவர்களது வாய்மொழி இலக்கியமே. செவ்வியல் கலைகளுக்கான புழங்கு வெளி ஒருபோதும் வெகுசன மக்கள் நெருங்குவதற்கானதாக இல்லை, மாறாக, நாட்டார் கலைகள் அந்த மக்களுடனேயே இருக்கின்றன. பல சமயங்களில் அவர்களும் அவற்றில் ஒரு பாத்திரமாக மாறிவிடுகிறார்கள். இதனாலேயே மக்களுக்கான கலை வடிவங்களை உருவாக்க நினைப்பவர்கள், நாட்டார் கலைகளிலிருந்து தங்களை உருவாக்கிக்கொள்ள நினைக்கிறார்கள்.