30/11/2021
திண்டுக்கல்: பேகம்பூர் பொதுமக்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கட்சியின் கூட்டமைப்பு சார்பில்,மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் பேகம்பூர் பொதுமக்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கட்சியினர் கூட்டமைப்பு சார்பில், இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள் உட்பட இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் கடந்த தமிழகத்தில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் சிறைவாசிகள் விடுதலை செய்வதில் ஏமாற்றி விட்டனர். தற்போது நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் சிறைவாசிகளை விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் வாக்குறுதி கொடுத்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் அன்று பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் இஸ்லாமிய சமுதாயம் சார்ந்த சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படவில்லை. இந்த சிறைவாசிகளின் விஷயத்தில் மறுபரிசீலனை செய்து உச்ச நீதிமன்றம் அறிவித்த ஆணைப்படி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வருகின்ற புதன் கிழமை அனைத்து இஸ்லாமிய பேரமைப்பு சார்பாக பேகம்பூர் திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வில், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹபிபுல்லா, அகில இந்திய மஸ்லிஸ் கட்சி தென்மண்டல பொதுச் செயலாளர் ரியாஜ் அகமது, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அனஸ் முஸ்தபா, இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட செயலாளர் ஷேக் பரீத், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சர்புதீன், பழனி பாபா மாணவர் பேரியக்கம் நிறுவன தலைவர் குத்பூதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.