Fan club of Writer Sujatha

Fan club of Writer Sujatha This is the unofficial page of greatest writer S.
(1)

Rangarajan (3 May 1935 – 27 February 2008), better known as Sujatha, he was an Indian author, novelist and screenwriter who wrote in Tamil.

24/04/2026

சுஜாதாவின் பத்து பொன்மொழிகள் :

01.ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும். ஏதாவது ஒன்று.

உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி.இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல.கேள்வி கேட்காத நம்பிக்கை.கேள்வி கேட்பது சிலவேளை இம்சை.நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.

02.அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு
அவர்கள் சொல்வதைச் செய்துபாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் 100 கிராம் காப்பி பவுடர்(அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

03.மூன்று மணிக்குத் துவங்கும் மதிய ஷோ போகாதீர்கள்.க்ளாஸ் கட் பண்ண வேண்டிவரும். தலைவலி வரும்.காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம்செய்யாதீர்கள்.

04.நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை.
உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

05.ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில்,யோக்கியமாக,மனச்சாட்சி உறுத்தாமல்.

06.இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமைபெற்ற நீங்கள், இந்திய ஜனத்தொகையின் ஆறு சதவிகித மேல்தட்டு மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.

07.வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம்.
காதலுக்கு ரொம்பச் செலவாகும்.பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

08.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால்,எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றிவியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள், எதையாவது
வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

09.ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும்.
மிஞ்சிப்போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.

10.படுக்கப்போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்).
எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சிசெய்துதான் பாருங்களேன்.

16/04/2026

முதல்வன் பற்றி சுஜாதா….
சுஜாதா கூறுகிறார்….

நான் ஆதாரமாக கதைகள், நாவல்கள் எழுதும் எழுத்தாளன். என்னைப் பல முறை பல காரணங்களுக்காகத் திரைக்கதை எழுதுவதற்கு அழைப்பார்கள். கதை பிடித்திருந்தால்தான் அவற்றை எடுத்துக் கொள்வேன்.

கதை பிடித்திருந்தது என்பதற்கு சில விதிகள் எனக்கு உள்ளன.

முதலாவதாக கதைக்கு ஒரு ‘ப்ரிமைஸ்‘ இருக்க வேண்டும். அதன் சாரத்தை ஒரு வரியில் சொல்வதற்கு இயல வேண்டும்.

‘ப்ரிமைஸ்‘ என்பது, கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டும். இதை ‘வாட் இப் — what if ‘ என்பார்கள். எல்லா நல்ல படங்களுக்கும் இந்த ‘ப்ரிமைஸ்’ உண்டு.

ஒரு சாதாரண டி.வி. ரிபோர்ட்டருக்கு, ஒரு நாள் மட்டும் முதல்வராகும் வாய்ப்பு வந்தால் என்னாகும் ? (முதல்வன்)

‘முதல்வன்’ திரைப்படத்தின் உருவாக்கத்தில் (வசனம்) பங்கு கொண்டவன் என்ற தகுதியில், தமிழ் சினிமாவின் இன்றைய நிலையைப் பற்றிச் சிந்திக்க முடிகிறது.

‘முதல்வன்’ ஒரு பெரிய நடிகருக்காகப் ‘பண்ணப்பட்ட’ கதை. அதைக் கேட்டு அவர் மிகுந்த சிந்தனைக்குப் பின், ‘இந்தக் காலகட்டத்தில் நான் இந்தப் படத்தில் நடித்தால் பிரச்னைகள் வரும்’ என்று வருத்தத்தோடுதான் நிராகரித்தார். இதை அவர் துவக்க விழாவிலேயே சொன்னார். நிஜவாழ்வும், சினிவாழ்வும் தமிழ்நாட்டில் இரண்டறக் கலந்திருப்பதினால் வரும் தயக்கம். அவர் எடுத்த முடிவு சரியா என்பதைப் படம் வந்ததும் நீங்கள் தீர்மானிக்கலாம்.

கதை சுவாரஸ்யமாக இருந்ததால், ‘பெரிய நடிகர் இல்லாமல், ஒரு நல்ல நடிகர் இருந்தாலே போதும்’ என்று சொன்னேன். ஷங்கர் இறுதியில் தன்னுடைய முதல் வெற்றிப் படமான ‘ஜென்டில்மேன்’ னில் நடித்த அர்ஜுனைத் தேர்ந்தெடுத்தார். கதாநாயகிக்கு ‘இந்தியனி’-ல் நடித்த மனிஷா கொய்ராலாவை ஒப்பந்தம் செய்தார்.

‘முதல்வன்’ ஒரு எளிய கருத்தைச் சொல்லும் படம். புராணக் கதைகளில் தீடீரென யானை வந்து மாலை போட்டதும், ‘நீதான் இந்த நாட்டுக்கு ராஜா’ என்று சொல்வார்களே…. அது போன்ற கதை. தற்செயலாக ஒருவனுக்கு ஒரே ஒரு நாள் முதல்வராக இருக்கச் சந்தர்ப்பம் கிடைக்கிற ஒரு fairy tale . அதன் விளைவுகளை, ஷங்கரின் பாணியில் பிரமாண்டமான காட்சிகள், பிரமிப்பூட்டும் படப்பிடிப்பு, டி.டி.எஸ்., ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற சமாச்சாரங்களுடன் சுவாரஸ்யம் குறையாமல் சொல்கிறார்.

16/04/2026
14/04/2026

திருடா திருடா பற்றி சுஜாதா….
சுஜாதா கூறுகிறார்……

மணிரத்னம் பெங்களூர் வரும்போது சிலசமயம் என்னை வந்து சந்திப்பார். தன் புதிய படங்களின் கதையை ஒரு முறை என்னிடம் சொல்லி கருத்து கேட்பார். இந்த ஐடியா பிடித்திருக்கிறதா என்று கேட்டார்.

“கிராமத்தில் இரண்டு திருடர்கள்….. ஒரு முடிவில்லாத சேஸ். இது பிடித்திருக்கிறதா ?” என்றார்.

“பிடித்திருக்கிறது. எழுதலாம்” என்றேன்.

மணிரத்னத்தின் Professionalism பற்றி சுஜாதா…

அண்மையில் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்தேன். அதில் ஒரு வரி. வசனம் கூட இல்லை. சம்பவக் குறிப்பு:

“லாரி சரேல் என்று திரும்ப, மலைப்பாதையில் கன்டெய்னருடன் சேர்ந்து உருண்டு விழுகிறது.”

திரைப்படத்தின் பெயர் “திருடா திருடா.” இயக்குனர் பெயர் மணிரத்னம்.

மணிரத்னத்தைப் பற்றி பல பேர் பல கோணங்களில் எழுதி விட்டார்கள். நான் புதுசாக எழுத வேண்டுமெனில் அவருடைய முழுமையான Professionalism பற்றி சொல்லத் தோன்றுகிறது. அதற்கு உதாரணம் மேற் சொனன வாக்கியம். ‘கன்டெய்னர்’ கதைக்கு முக்கியமானது. உருட்டி விட்டுச் சும்மா இருக்க முடியாது. மீண்டும் வேண்டும்.

“மணி, கன்டெய்னர் உருள முடியுமா, இல்லை Table top வச்சு….”

“நோ ப்ராப்ளம் ஸார்.”

“கன்டெய்னர் நிறைய நீளம் இருக்கும்.”

“தெரியும். நாப்பது அடியாவது இருக்கும். எழுபது அடி இருந்தா பரவாயில்லை.”

“அதை உருட்ட முடியும்ங்கறீங்க?”

“நோ ப்ராப்ளம். நீங்க எழுதினதைக் கொஞ்சம் மாத்தி கன்டெய்னர் உருண்டு ஓர் ஏரியில் விழுந்து உள்ளே போய்டறது. அடுத்த காட்சில அதை மெல்ல யானைகள் உதவியோட வெளில இழுத்துக் கொண்டு வந்துர்றாப்பல எடுப்போம்.”

“எங்க எடுப்பீங்க ?”

“பொள்ளாச்சி டாப்ஸ்லிப்ல.”

“யானை? ”

“கேரளாவிலிருந்து வரவழைச்சுக்கலாம்.” என்று உதவி டைரக்டர்கள் பெருமாள், மோகன் இவர்களைக் கூப்பிட்டு, “லாரி கன்டெய்னர் இரண்டையும் முதல்ல அனுப்பிச்சுட்டு மலை ஏறுதா, பாதை அகலம் பத்துமா பார்த்துருங்க. ஸ்டன்ட் மாஸ்டர் கிட்ட தண்ணிக்குள் இருந்து கன்டெய்னரை எடுக்க கிரேன், பிளாக் டாக்கிள் செயின் என்ன, என்ன வேணும்னு லிஸ்ட் போட்டுடுங்க .”

படத்தில் சுமார் நாற்பது செகண்ட் வரப் போகும் காட்சி இது.

இந்தச் சம்பாஷணை நடந்தது சோளவரம் விமான நிலையத்தில் தோட்டா தரணி அமைத்த பண்ணை செட்டில். அதில் எடுக்க வேண்டிய காட்சிகள் முடிந்து கடைசியில் பண்ணை தீப்பற்றி எரிய, அதனுள் தன் நண்பனைக் காப்பாற்ற பிரசாந்த் உள்ளே ஓட, ஹீரா தடுக்க, “பண்ணை வெடிக்கிறது.”

ஒத்திகை முடிந்து படம் எடுக்கத் தயாராகி அனைத்து இடங்களிலும் பெட்ரோல் ஊற்றிச் சின்னச் சின்ன பெட்ரோல் பைகள் சுவிட்ச் போட்டதும் கோபிக்கத் தயாராக இருக்க, நான் அச்சானியம் போல –

“மணி, ஒரு சந்தேகம்.”

“என்ன?”

“இப்ப எரிச்சுர்றீங்க. காட்சி திருப்தியா வரலைன்னா என்ன செய்வீங்க !” அருகே இருந்த காமிரா ‘P .C ‘ ஸ்ரீராம் “மறுபடி செட் போட்டு மறுபடி எரிப்போம்.” என்றார்.

மணிரத்னம் “ஸ்டார்ட் காமிரா. ஆக் ஷன் !” என்றார்.

-----------
திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் கதிரும் (ஆனந்த்) அழகும் (பிரசாந்த்) இணைபிரியாத நண்பர்கள் மேலும் இவர்களின் தோழியான ராசாத்தியும் இவர்களுடன் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றாள். காவல் துறையினரிடமிருந்து பலமுறை தப்பிச் செல்லும் இவர்கள் நடனமாடும் பெண்ணொருத்தியைச் சந்திக்கின்றனர். மேலும் அவளின் கூற்றுப்போல 1000 கோடிகள் மதிப்புடைய பணத்தினைத் தேடியும் செல்கின்றனர். இதன் பிறகு அவள் சர்வதேச அளவிலான திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் திருட்டுக் கும்பலில் ஒருத்தியெனவும் மேலும் அவள் வைத்திருக்கும் அடையாள அட்டை ஒன்றின் மூலமே அக்கும்பல்களின் தலைவனால் கடத்தப்பட்டுச் செல்லப்படும் பணத்தினைப் பெற முடியும் என்பதனையும் அறிகின்றனர். இவற்றைத் தெரிந்து கொள்ளும் அத்திருடர்களின் தலைவன் அவனுடைய காடையர் கூட்டத்துடன் தனக்குத் துரோகம் செய்தவளைத் தேடுகின்றான். பின்னர் அவர்கள் அப்பணத்தை எடுத்தார்களா இல்லை கதிரும் அழகும் அப்பணத்தைப் பெற்றனரா என்பதே கதையின் முடிவாகும்.

திருடா திருடா திரைப்படம் 1993 –ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்த், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படமே இந்தியாவின் அகேலா கிரேன் மூலம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.

ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சோர் சோர் என வெளியிடப்பட்டது

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் கூறுகிறார்….

மணி ரத்தினத்தின் ‘திருடா திருடா‘ (1993) படப் பிடிப்பின்போது, திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சில வேண்டாத சம்பவங்கள் நிகழ்ந்தன. திருவட்டார், நாகர் கோவில் - கேரளா பார்டருக்கு மிக சமீபம். சாப்பாட்டில் அரிசி முழுசாக முறைத்துப் பார்க்கும். ஜனவரி வெயில் அங்கே கன்னங்கரேர் என்று ஆளைக் கருக்க வைக்கும்.

பிரமாதமான, புராதனக் கோவில். எக்கச்சக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய பிரகாரம். பிரம்மாண்டமான பெருமாளை தரிசனம் பண்ணுவதற்கே மூன்று வாசல்கள். அனந்தசயனமாகப் பாம்பின் மேல் படுத்திருக்கும் பெருமாளை தலை, தொப்புள், கால் என்று மூன்று வாசல்களிலும் உள்ளே போய் தரிசிக்க வேண்டும்.

இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார்.பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது. இதனால் இவரை வணங்கினால், மறுபிறப்பு கிடையாது என்பது ஐதீகம். கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார்.ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.

காமெராமேன் P.C.ஸ்ரீராம், இயக்குனர் மணி போன்றவர்கள் கோவிலுக்குப் போகப் பிடிக்காத ஜாதிக்காரர்கள் என்பதால், நானும், பிரசாந்தும் மட்டும் போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம்.

கோவில் வெளிப் பிரகாரத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த படப்பிடிப்பை நிறுத்துமாறு திடீரென்று கலாட்டா செய்தார்கள் ஒரு உள்ளூர் கோஷ்டியினர். ‘சுத்த பத்தமில்லாத சினிமாக்காரர்களை கோவிலுக்குள் படமெடுக்க யார் அனுமதி கொடுத்தது?’ என்று யாரோ அதிரடி ஆன்மீகச் செம்மல் துள்ளல் சத்தம் போட, ஒரு பிரச்னை பூதாகாரமாக வெடித்தது. சிறிது நேரத்தில், அது உள்ளூர் அரசியல் கலாட்டாவாக (VHP vs Congress) உருவெடுத்தது. கிட்டத்தட்ட காமெரா, லைட் உபகரணங்கள், படப்பிடிப்பு சாதனங்கள் எல்லாமே உடைந்து சேதமாகும் நிலை வந்து விட்டது.

அந்த புராதனக் கோவிலில் விலை மதிப்பற்ற ஸ்வாமி நகைகள் பலவும் சமீபத்தில் திருடு போயிருக்கின்ற விபரமும் எங்களை திடுக்கிடச் செய்தது.

வழக்கம்போல் அவசர போலீஸ் கையைப் பிசைந்து கொண்டு நின்றது.

நேரம் ஆக ஆக, கூட்டம் தீவிரமாகி, கோஷங்கள், “அடிங்கடா, உதைங்கடா” ரேஞ்சுக்குப் போனதும், அன்றைய படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டது. நாங்களும் வேறு ஒரு லொகேஷனுக்கு போய்ச் சேர்ந்து, படப்பிடிப்பு வேலைகளைத் தொடர்ந்தோம்.

14/04/2026

இனிய காலை வணக்கம், இந்த தமிழ்ப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக அமைய இறைவனை வேண்டுகிறேன் 🥰🙏💐🌹

13/04/2026

முதல் கதை - சுஜாதா(கற்றதும் பெற்றதும்)

புதிய எழுத்தாளர்கள் பலர் எனக்கு எழுதும்போது, 'உங்கள் கதைகள் ஆரம்ப காலத்தில் நிராகரிக்கப் பட்டனவா?' என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு எல்லா எழுத்தாளர் களும் யோக்கியமாகப் பதில் சொல்ல மாட்டார்கள்.

குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் ஒரு ஸ்டாக் பதில் வைத்திருக்கிறார்கள். "என்னவோ தோணிச்சு... நாலு கிறுக்குக் கிறுக்கினேன். அதை அனுப்பி வெச்சேன். உடனே பிரசுரமாயிருச்சு. எனக்கே தெரியாது. யாரோதான் சொன்னாங்க - 'உன் கதை விகடன்ல வந்திருக்குன்னு. அப்பதான் என்கிட்ட எழுத்துத் திறமை இருக்குன்னு கண்டுபிடிச்சேன். அப்பலருந்து இப்ப வரைக்கும் அப்படித்தான். நான் அனுப்பிச்ச ஒரு கதைகூடத் திரும்ப வந்ததில்லை" என்பார்கள்.'

எல்லாம் புளுகு. முதல் கதை திரும்பி வராத ஒரே எழுத்தாளன் ஆதிமனிதன் மட்டும்தான்.

ஸ்ரீரங்கத்தில் 'தென்றல்' கையெழுத்துப் பத்திரிகையில் இருந்தே என் கதைகளின் நிராகரிப்பு துவங்கிவிட்டது.

'கள்வர் தலைவன்' என்ற ஒரு கதை எழுதிக் கொண்டுபோய் 'தென்றல்' ஆசிரியருக்குக் காட்டியபோது (மொத்த சர்க்குலேஷன் பத்து) 'ஏம்பா... நாங்க தரமான இலக்கிய பத்திரிகை நடத்தறோம். பாப்பா மலர் இல்லைன்னு தெரியாதா?' என்று நிராகரித்து விட்டார்.

அதன்பின்தான் வல்லபாய் படேல் பற்றிய என்னுடைய பிரசித்தி பெற்ற அறுசீர் விருத்தத்தை எழுதிக் கொண்டு கொடுத்தேன். அதுவும் நிராகரிக்கப்பட்டது. 'கவிதை போடறதில்லைப்பா.. தமிழ்ல நல்ல கவிதைகள் எல்லாம் எழுதிட்டாங்கப்பா' என்றார் ஆசிரியர் ஜனனி.

பி. எஸ்.ஸி. படிக்கும்போது ஒரு கதை கலைமகளுக்கு அனுப்பினேன். அது ஒரு கவிஞனின் கதை. தபாலில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் திரும்பி வந்து விட்டது.

அப்புறம் ரேடியோ நாடகம் ஒன்று எழுதி திருச்சி வானொலி நிலையத்துக்குக் கொண்டுபோய்க் கொடுத்தேன். "பார்வையற்றோர் பற்றிய டிராமா ரேடியோவில் எடுபடாது' என்று சொல்லி நிராகரித்து விடுவார்கள்.

அதன்பின் திருலோக சீதாராமின் 'சிவாஜி' பத்திரிகையில் என் முதல் கதை வெளிவந்தது. அதைப் பற்றி தனிப்பட்ட கட்டுரையே எழுதியுள்ளேன்.

பத்திரிகை வந்த கையோடு தெப்பக்குளம் கடைகளில் எல்லா காப்பிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன (பத்து காப்பியையும் நானே வாங்கினதால்). அடுத்த நாளே மற்றொரு கதை எழுதி சிவாஜி அலுவலகத்துக்குக் கொண்டுபோய் கொடுத்தேன். அது வெளிவரவில்லை. என்ன கதை என்றும் நினைவில்லை.

அதன்பின் குழந்தை எழுத்தாளனாக மாறிவிட தீர்மானித்தேன்.

அந்த நாட்கள் குழந்தைப் பத்திரிகைகளின் பொற்காலம். அணில், ஆடு என்றெல்லாம் பத்திரிகைகள் வந்தன.

காலணாவுக்கெல்லாம் (சுமார் ஒரு பைசா) பத்திரிகைகள் கிடைக்கும். அவற்றில் 'ஜிங்லி', 'கண்ணன்' போன்ற பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பினேன். நல்ல வேளை, அவர்களும் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

ரெகுலர் எழுத்தாளனா, குழந்தை எழுத்தாளனா, கவிஞனா என்ற அடையாளக் குழப்பம் தீர்ந்து மூன்றும் இல்லை என்பது தெளிவாயிற்று. இருந்தும் கதை எழுதும் நப்பாசை பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட உணவு வஸ்துபோல அவ்வப்போது தொந்தரவு செய்தது.

எம்.ஐ.டி. படிக்கிறபோது 'குமுதம்' பத்திரிகை ஒரு சிறுகதைப் போட்டி நடத்தியது. பரிசு ரூபாய் நூறு . அதற்கு ஒரு.. ஸாரி.. ஓர் அற்புதமான கதை எழுதினேன் (எனக்கு மட்டும் அற்புதம்). அது போர்டுக்கு கூட வரவில்லை. முதல் பரிசு கிடைத்த கதையைப் படித்து 'இந்த அடாசுக்குப் போய் கொடுத்திருக்கிறார்களே.. என் காவியத்தை நிராகரித்துவிட்டார்களே என்று பத்திரிகை உலகத்தின் மேல் ஹோல்சேலாக வெறுப்பு ஏற்பட்டு ஆத்திரத்தில் ரயில் பாதையைக் கடந்து..................
....பங்க் கடைக்குப் போய் முடி வெட்டிக் கொண்டேன்.

குரோம்பேட் ஸ்டேஷனில் சுண்ணாம்பு தடவித் தடவி சோனியாகப் போன மரத்தின் அடியில் எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது. 'உனக்குப் படிப்புத்தான் முக்கியம். முதலில் படிப்பை முடி. தமிழ் இலக்கியத்தை அப்புறம் காப்பாற்றலாம். அதுவரை கோமாளிகள் எழுதிக் கொண்டிருக்கட்டும். போனால் போகிறது' என்ற தீர்மானத்துக்கு வந்தேன். இருந்தும், குடத்தில்
இட்ட விளக்காக என் பிரகாசம் பத்து சென்டிமீட்டருக்கு மேல் எட்டாதது வருத்தமாக இருந்ததால் கதை எழுதுவதையே நிறுத்திவிட்டு கிரிக்கெட் ஆடத் தீவிரமானேன்.

எம்.ஐ.டி. டீமில் ரிசர்வ் பிளேயராக சீஸன் பூரா ஒரு மாட்ச் கூட ஆடாமல் சாதனை படைத்தேன். பின்னர் படம் வரைந்தேன். கித்தார் பழகினேன். புல்லாங்குழல் வாசித்தேன். என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன். என் உள்மனதின் படைப்பு ஆசைகளுக்கு வடிகால் தேவைப்பட்டது என்று ஜல்லியடிக்க விரும்பவில்லை. Restless mind அவ்வளவுதான்.

டிகிரி பாஸ் செய்து வேலைக்குப் போகும் வரை எழுதாமலேயே நான்கு ஐந்து வருஷம் வாழ்ந்தேன்.
வேலை கிடைத்து

டெல்லியில் நண்பன் சீனிவாசனுக்கு ஒரு கதை யைத் திருத்திக் கொடுத்தேன். அது பிரசுரமானதும் நாமே எழுதிப் பார்த்தால் என்ன என்று அனுப்பினேன். ஆனால், அது திரும்பி வந்தது.

அதன் பின்னர் குமுதத்தில் "சசி காத்திருக்கிறாள்" என்று நான் எழுதிய ஒரு கதை வந்தது. அப்போது எல்லாம் குமுதத்தில் தாராளமான 25 ரூபாய் அனுப்புவார்கள்.

மற்றொரு 25 ரூபாய்க்கு செக் அனுப்பி வைத்து எஸ்.ஏ.பி. அவர்கள் 'அடிக்கடி எழுதுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பின் என் கதைகள் திரும்ப வரவில்லை.

11/04/2026

சுஜாதா கேள்வி பதில்

அசோக்குமார்.
? ஸ்பீட் ரீடிங் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன் ?

! 1. தலையை இடம் வலமாக அசைக்காமல் வார்த்தை வார்த்தையாக மனசுக்குள் படிக்க வேண்டும்.

2. நாவல்களில் பாராக்களின் முதல் வரிகளையும், உரையாடல்களையும் மட்டும் படித்தால் கதை புரிந்து விடும்.

3. தெரிந்த விஷயத்தை விளக்கும் வரிகளை, முன்னுரை, நன்றியுரை எல்லாவற்றையும் தாவிவிட வேண்டும்.

வெங்கடேஸ்வரன்.
? எப்படி உங்களால் நேரம் காண முடிகிறது ? அதே இளமை வேகத்துடன் இருக்கிறீர்களே…?

! நேரம் காண்பது அனாவசியங்களைத் தவிர்ப்பதால். இளமை லோரியால் ( l’oreal ) உபயம்.

விவேக்.
? எழுதுகையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள் ?

! முதலில் யோசிக்காமல் எழுதுவேன். திருப்பிப் படிக்கும்போது சிந்தித்து திருத்துவேன்.

கே.அரவிந்த்.
? நீங்கள் ஸ்பென்சர் பிளாசாவுக்கு முக்காடு போட்டு வந்து ஒட்டுக் கேட்டீர்களா ? அது எப்படி நாங்கள் பயன்படுத்தும் அதனை வார்த்தைகளையும் நீங்கள் எழுதுகிறீர்கள் ?

! 1962-லிருந்து எழுதி வருகிறேனே, இந்தத் தகுதி கூட இல்லையேல் வெட்கம்.

ராம்.
? மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க யோகாவைத் தவிரவும் வேறு வழிகள் உள்ளன என்று பதிலளித்திருக்கிறீர்கள். அவைகளைச் சொல்லி எனக்கு உதவ இயலுமா?

! ஒரு வழி – நல்ல புத்தகங்கள் படிப்பது. பால் டேவிஸின் Superforce படித்துப் பாருங்கள்.

சுரேஷ்.
? தங்களின் எழுத்துலக வாரிசு…?

! எழுத்து என்பது என் பரம்பரைச் சொத்தல்ல. இதற்கெல்லாம் வாரிசுகளை நான் நியமிக்க முடியாது.

கல்யாண்.
? எழுத்தில் உள்ள உங்களது நகைச்சுவை உணர்வு நிஜ வாழ்க்கையில் குறைவாமே, அப்படியா ?

! நிஜ வாழ்வில் நகைச்சுவையாக இருப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணம் உங்கள் மேலதிகாரியைக் கேலி செய்ய முடியுமா ?

சபீர்.
? சோம்பேறித்தனத்தைக் கைவிடுவது எப்படி ?

! என் முறை இது. எடுத்த காரியத்தை ஒத்திப் போட மாட்டேன். இன்று இதெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு சிறு பட்டியல் எழுதி வைத்து, மறு தினம் அதில் செய்து முடித்தவைகளை அடித்து விடுவேன்.

11/04/2026

சுஜாதாவின் கேள்வியும் சாவியின் கோபமும் — ரவிபிரகாஷ்
சக்தி விகடன் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ் கூறுகிறார்….

இடமிருந்து வலமாக: சாவி சாரின் இளைய மாப்பிள்ளை ஆடிட்டர் ராமமூர்த்தி, ராணிமைந்தன், நான்( ரவி பிரகாஷ்), எழுத்தாளர் சுஜாதா, சாவி, எழுத்தாளர் சிவசங்கரி, டாக்டர் கி.வேங்கடசுப்பிரமணியன்.

இந்தப் போட்டோ எடுக்கப்பட்ட சூழ்நிலையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறேன்.

சாவி வார இதழில் ‘மண் வளம் கமழும் மாவட்டச் சிறுகதைப் போட்டி’ ஒன்று அறிவித்திருந்தேன். அதற்கு ஆயிரத்துக்கும் மேல் சிறுகதைகள் வந்தன. நான் ஒருவனே அத்தனைக் கதைகளையும் படித்து, சிறப்பான கதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரம் ஒன்றாக வெளியிட்டு வந்தேன். இப்படி மொத்தம் 65 கதைகளை வெளியிட்டேன்.

இந்த 65 கதைகளிலிருந்து பரிசுக்குரிய ஆறு சிறுகதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவில் இருந்தவர்கள்: எழுத்தாளர்கள் சுஜாதா, சிவசங்கரி, கவியரசு வைரமுத்து, டாக்டர் கி.வேங்கட சுப்ரமணியன் மற்றும் ஆசிரியர் சாவி.

65 கதைகளையும் படிக்க இவர்களுக்கு அவகாசம் இருக்காது என்பதால், அவற்றிலிருந்து மிகச் சிறப்பான 15 கதைகளைத் தேர்ந்தெடுத்து, தனக்கும் மற்ற நால்வருக்கும் ஜெராக்ஸ் பிரதிகள் கொடுக்கச் சொன்னார் சாவி. அடுத்த வாரத்தில் ஒரு நாள் அவர்கள் அனைவரையும் சாவி இல்லத்துக்கு அழைத்து, கலந்துரையாடி, பரிசுக்குரிய ஆறு கதைகளை ஏக மனதாகத் தேர்ந்தெடுப்பது என்பது திட்டம்.

அதன்படி, நானே பதினைந்து மிகச் சிறப்பான சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்தேன். அனைவருக்கும் அவற்றின் பிரதிகளை அனுப்பி, என்றைக்கு சாவி இல்லத்தில் நடுவர் குழு ஒன்று கூடிக் கலந்துரையாடுவது என்றும் பேசி, அனைவருக்கும் வசதிப்படும் ஒரு தேதியை நிச்சயித்தேன்.

அந்த நாளும் வந்தது. கவியரசு வைரமுத்து தவிர, அனைவரும் உரிய நேரத்தில் ஆஜராகிவிட்டனர். வைரமுத்து அந்தச் சமயம் அமெரிக்கா சென்றிருந்த காரணத்தால், தனது தீர்ப்பை – எந்தக் கதைக்கு முதல் பரிசு, எது இரண்டாம் பரிசுக்குரியது என்றெல்லாம் ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியே மதிப்பெண்கள் கொடுத்துத் தெளிவாக எழுதிக் கையெழுத்திட்டு, தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பியிருந்தார்.

அவரைத் தவிர, மற்றவர்கள் ஒரு அறையில் குழுமினோம். கலந்துரையாடல் தொடங்கியது.

ஒவ்வொரு கதையையும் ஆழமாகப் படித்து வந்திருந்தார் சிவசங்கரி. மிக ஆழமாக அலசி ஆராய்ந்து, தன் கருத்தைத் தெரிவித்தார். டாக்டர் கி.வேங்கட சுப்பிரமணியனுக்கு ரொம்பத் தாராள மனசு. ஒவ்வொரு கதையையுமே சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன்மாரி, தேனில் தோய்த்த பலாச்சுளை, பாலில் ஊறிய பாதாம் பருப்பு, நெய் வார்த்த சர்க்கரைப் பொங்கல், ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன் என்றெல்லாம் ஏகபோகமாக வர்ணித்து, அனைத்துமே முதல் பரிசு பெறத் தகுதியுள்ளவை என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்.

அடுத்து, சுஜாதாவின் முறை. அவரை அபிப்ராயம் சொல்லும்படி கேட்டார் சாவி. அப்போது சுஜாதா ஒரு பிரச்னையைக் கிளப்பினார்.

சாவி அதற்குத் தகுந்த விளக்கம் சொல்லிவிட்டு, பரிசுக்குரிய கதைகள் பற்றிய சுஜாதாவின் தீர்ப்பைச் சொல்லும்படி வற்புறுத்தினார்.

ஆனால், சுஜாதா மீண்டும் மீண்டும் தான் சொன்னதையே சொல்லி, “… அதன் பின்புதான் நான் என் தீர்ப்பைச் சொல்ல முடியும்” என்று சொல்ல, சாவிக்குக் கோபம் வந்துவிட்டது.

அப்படி சுஜாதா என்ன பிரச்னையைக் கிளப்பினார்?

பரிசுக்குரிய சிறுகதைகளை முடிவு செய்து, பத்திரிகையில் வெளியிட அன்றைக்குத்தான் கடைசி நாள். மதியம் 2 மணிக்குத் தொடங்கிய நடுவர் குழு கலந்துரையாடல் மாலை 5 மணி வரை தொடர்ந்தது. சட்டுப் புட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வந்து, பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினார் ஆசிரியர் சாவி.

அப்போது சுஜாதா கேட்டார்… “சார்! இந்தப் பதினைஞ்சு கதைகளையும் நான் படிச்சுட்டேன். இதிலிருந்துதான் நான் பரிசுக் கதைகளைத் தேர்வு செய்யணுமா?”

“ஆமாம்! ஏன்?” – சாவி சார் புரியாமல் கேட்டார்.

“இல்லை. நான் அந்த 65 கதைகளையும் படிக்க விரும்பறேன்!” என்றார் சுஜாதா.

“ரொம்பச் சந்தோஷம். தாராளமா படிங்க! பிரசுரமான அத்தனைக் கதைகளின் கட்டிங்குகளும் இருக்கு. கொடுக்கச் சொல்றேன். நாளைக்கு அல்லது மறு நாளைக்குள்ள உங்க வீட்டுக்குக் கொடுத்தனுப்பறேன்…”

“நல்லது! எனக்கு ஒரு வாரம் டயம் கொடுங்க. அத்தனைக் கதைகளையும் படிச்சுட்டு, அப்புறம் என் தீர்ப்பைச் சொல்றேன்” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் சுஜாதா.

“சுஜாதா! என்ன சொல்றீங்க..! இன்னிக்கு இஷ்யூ முடிக்கணும். இதுல நாங்க ரிசல்ட்டை வெளியிடணும். அடுத்த வாரத்துக்கெல்லாம் ஒத்திப் போட முடியாது!”

“ஏன்… போடலாமே? பரிசீலனை நடந்துகொண்டிருக்கிறது. முடிவு அடுத்த இதழில்னு போட்டுடுங்களேன்!” என்றார் சுஜாதா.

“இப்ப நீங்க சொல்ற இதே வாக்கியத்தை நாங்க போன இதழ்லேயே போட்டாச்சு. அதனால, தள்ளிப் போட முடியாது. அதிருக்கட்டும்… இப்பவே உங்க தீர்ப்பைச் சொல்றதுல உங்களுக்கென்ன கஷ்டம்?” – சாவியின் குரலில் லேசாக சலிப்பும் எரிச்சலும் கலந்திருந்ததை நான் கவனித்தேன்.

“அத்தனைக் கதைகளையும் படிச்சாதான் எது பெஸ்ட்டுனு என்னால தீர்மானிக்க முடியும்!” என்றார் சுஜாதா.

“அதுக்கு இப்போ நேரமும் இல்லை; அவசியமும் இல்லையே?!”

“நேரம் இல்லைன்னா அது உங்க பிராப்ளம், சார். ஆனா, அவசியம் இருக்கு!”

“என்ன அவசியம்?”

“நீங்க என்ன அறிவிச்சிருக்கீங்க உங்க பத்திரிகையிலே? ‘போட்டிக்கு வந்த கதைகள்ல சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு கதைகள் வீதம் தொடர்ந்து பிரசுரம் பண்ணி, மொத்தம் 65 கதைகள் வெளியிட்டிருக்கோம். இந்த 65 கதைகளையும் நடுவர் குழு படிச்சுப் பார்த்துப் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுக்கும்’னுதானே போட்டிருக்கீங்க? அப்போ, நியாயமா பார்த்தா அந்த 65 கதைகளையும் நாங்க படிக்கணுமா, வேணாமா?” என்று லாஜிக்கான ஒரு கேள்வியைக் கேட்டார் சுஜாதா.

“ரொம்ப நியாயம் சுஜாதா! நான் ஒப்புக்கறேன். உங்களுக்கு அந்த 65 கதைகளையும் தரேன். தாராளமா படிங்க. ஆனா, இப்போ இந்த 15 கதைகள்லேருந்து உங்க தீர்ப்பைச் சொல்லுங்க” என்றார் சாவி.

“இல்லே சார், அது சரியா வராது…” என்று தயங்கினார் சுஜாதா.

“நீங்க ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறீங்கன்னு எனக்குப் புரியலை சுஜாதா?” என்று சலித்துக்கொண்டார் சாவி. “இந்தக் கதைகள்ல எதுவுமே நல்லா இல்லைன்னு சொல்றீங்களா? அதான் உங்க அபிப்ராயம்னா, அதையாவது சொல்லுங்க. அப்படியே போட்டுடறேன்” என்றார் எரிச்சல் கலந்த குரலில்.

“அதில்லே சார்! வாசகர்கள் அந்த 65 கதைகளையும் படிச்சிருப்பாங்க. ஒருவேளை, இந்தப் பதினைந்து கதைகளைவிடவும் அருமையான கதை அதுல இருந்தா, ‘என்ன… சுஜாதா நடுவரா இருந்துக்கிட்டு, இந்த அருமையான கதையை செலக்ட் பண்ணாம, வேற எதையோ செலக்ட் பண்ணியிருக்காரே’ன்னு என்னையில்ல தப்பா நினைப்பாங்க?” என்றார் சுஜாதா.

“ப்பூ… இவ்வளவுதானா! இப்ப ஒரு ரகசியத்தை உங்களுக்குச் சொல்றேன். இந்த 65 கதைகளையும் நான்கூடப் படிச்சதில்லை. நானும் உங்களைப்போல 15 கதைகளை மட்டும்தான் படிச்சேன். இதுலேர்ந்துதான் நானும் என் முடிவைச் சொல்லப் போறேன்.அதனால கவலையே படாம, தைரியமா உங்க தீர்ப்பைச் சொல்லுங்க” என்றார் சாவி சார்.

சுஜாதாவுக்கு அப்போதும் தயக்கம். “இல்லே சார்… அது சரியா வராது…” என்று இழுத்தார்.

“இதோ பாருங்க சுஜாதா! இந்தப் பதினைந்து கதைகளைவிட அருமையான கதை, மீதி உள்ள கதைகள்ல இருந்துடப் போறதேங்கிறது உங்க கவலை. எனக்குப் புரியுது. ஆனா, போட்டிக்கு வந்த அத்தனைக் கதைகளையும் படிச்சு, செலக்ட் பண்ணிப் பிரசுரிச்சவன் ரவிபிரகாஷ்தான். வேறு யாரும் படிக்கவும் இல்லை; பரிசீலிக்கவும் இல்லை. அவனேதான் இந்த 65 கதைகள்லேருந்து மிகச் சிறந்ததா 15 கதைகளை செலக்ட் பண்ணிக் கொடுத்திருக்கான். அதனால, இதைத் தாண்டி வேறு சிறப்பான கதை மத்த செட்ல இருக்காதுங்கிறதுக்கு நான் கேரண்ட்டி! நீங்க தாராளமா இதுல எது பெஸ்ட்டுன்னு தேர்ந்தெடுக்கலாம்” என்றார் சாவி.

சுஜாதா அப்போதும் சமாதானமாகவில்லை. “சரி சார்! எனக்கு ஒரே ஒரு நாள் மட்டும் டயம் கொடுங்க. இந்த 65 கதைகளோட சினாப்ஸிஸை டைப் பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க. அதை நான் விறுவிறுன்னு படிச்சுட்டு, நாளைக்கு மத்தியானத்துக்குள்ள என் முடிவை உங்களுக்குச் சொல்லிடறேன்” என்றார்.

அவ்வளவுதான்… சாவி சார் கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டார். விருட்டென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.

“இல்லே சுஜாதா! இது சரியா வராது. விட்டுடுங்க. ரவி! இந்தா மத்த நாலு பேரோட தீர்ப்பு. இதும்படி ரிசல்ட்டைப் போட்டுடு. கூடவே, ‘சுஜாதா இந்தச் சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்க விரும்பாததால் விலகிக்கொண்டுவிட்டார்’னு ஒரு குறிப்பையும் போட்டுடு. இல்லேன்னா, இந்தத் தீர்ப்புக்கு அவரும் உடந்தைன்னு பாவம், அவருக்கு வாசகர்கள்கிட்டே கெட்ட பேர் வந்துடும்!” என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு, விறுவிறென்று அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்று, ஹால் சோபாவில் உட்கார்ந்துகொண்டுவிட்டார் சாவி சார்.

நாங்கள் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் ஒரு சில விநாடிகள் திக்பிரமையில் ஆழ்ந்திருந்தோம். எங்களிடையே ஒரு சங்கடமான மௌனம் நிலவியது.

சுஜாதா மெள்ள எழுந்து சென்று, சாவி சார் பக்கத்தில் போய் அமர்ந்தார். தணிந்த குரலில் ஏதோ பேசினார். நாங்கள் அதுவரை அறையிலேயே அமர்ந்திருந்தோம்.

“சுஜாதா கேக்குறதும் நியாயம்; சாவி சாரோட ஆதங்கமும் கரெக்ட்தான். இதுல நாம யார் பக்கம் சரின்னு எப்படிச் சொல்றது?” என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது.

சற்று நேரத்தில், சாவி சார் என்னை அழைக்கும் குரல் கேட்டது. போனேன். “இந்தா ரவி, சுஜாதாவோட ஜட்ஜ்மென்ட்! அஞ்சு பேரோட ரிசல்ட்டையும் கூட்டிக் கழிச்சுப் பார். எந்த அஞ்சு கதைகள் பரிசுக்குத் தகுதி பெறுதுன்னு உடனே எனக்கு ரிசல்ட்டைச் சொல்லு பார்க்கலாம்!” என்றார் சாவி.

ஏற்கெனவே மற்ற நால்வரும் ஏக மனதாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டிருந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லை. சுஜாதாவின் தீர்ப்பைப் பார்த்தேன். மற்றவர்கள் முதல் பரிசுக்குரியதாக ஏக மனதாகத் தேர்ந்தெடுத்த கதையையே சுஜாதாவும் தேர்ந்தெடுத்திருந்தார். இரண்டாம், மூன்றாம் பரிசுக்கதைகள் மட்டும் சற்றே முன்பின்னாக இருந்தன. இருப்பினும், மெஜாரிட்டிபடி பரிசுகளை அறிவிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை.

சுமுகமாக எல்லாம் முடிந்தது. அதன்பின்னர் டின்னர். சாவியின் மூத்த புதல்வர் பாச்சா (பாலச்சந்திரன்) அவர்கள், எங்களை நிற்க வைத்துப் புகைப்படம் எடுக்க விரும்பினார் (கலைஞர், சாவி இவர்களோடு நாங்கள் இருக்கும் புகைப்படத்தை எடுத்ததும் பாச்சாதான்). வரிசையில் ஓரமாக நின்றிருந்த என்னை அருகே அழைத்த சாவி, “ரவி! உன் அபிமான எழுத்தாளர் சுஜாதா பக்கத்தில் நின்னு படம் எடுத்துக்கோ! பின்னாடி ஒரு நாள் எடுத்துப் பார்க்கிறப்போ சந்தோஷமா இருக்கும்” என்றார். பின்பு, “சுஜாதா! இவன் உங்க பரம ரசிகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு அத்தனை உயிர்!” என்று அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். சட்டென்று என் மனம் நெகிழ்ந்து, இதயம் இளகின மாதிரி ஓர் உணர்வு. சரியாக அதை வர்ணிக்கத் தெரியவில்லை.

சுஜாதாவின் தீவிர வாசகன் நான் என்பது உண்மைதான். ஆனால், அவரைவிடவும் என் அபிமானத்துக்குரியவர் சந்தேகமில்லாமல் சாவி சார்தான்! எனவே, அன்றைக்கு அவரே என்னை அழைத்து, சுஜாதா பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, என் மனத்தில் உண்டான அதே உணர்வுகளை, இப்போதும் என்னால் உணர முடிகிறது. ஆனால், அதை உங்களுக்கு எப்படி விவரித்துச் சொல்வதென்றுதான் தெரியவில்லை.

சுஜாதாவை நான் முதன்முதல் நேரில் சந்தித்தது அந்த நிகழ்ச்சியின்போதுதான்!

– ரவிப்ரகாஷ்

சாவி பற்றி சுஜாதா...என் ‘நிர்வாண நகரம்‘ நாவல் குங்குமம் இதழ் துவங்கியபோது அதில் தொடர்கதையாக முதலில் வந்தது. ஆசிரியர் சாவ...
11/04/2026

சாவி பற்றி சுஜாதா...
என் ‘நிர்வாண நகரம்‘ நாவல் குங்குமம் இதழ் துவங்கியபோது அதில் தொடர்கதையாக முதலில் வந்தது. ஆசிரியர் சாவி தினமணி கதிரிலிருந்து விலகி, முரசொலி நிறுவனத்துடன் சேர்ந்து ஆரம்பித்த இதழ் அது. சாவி அவர்களைப் பற்றி ஒரு முன்குறிப்பு தேவை.

சாவி எந்தப் பத்திரிகையிலும் ஐந்து வருஷத்துக்கு மேல் தங்கியதில்லை. விலகி விடுவார். முதலில் அனந்த விகடனுக்குப் போட்டியாக கத்திரி விகடன் என்று ஆரம்பித்தார். எஸ்.எஸ்.வாசன் அவரை அழைத்து, ‘எதற்குப் போராடுகிறாய்? விகடனில் சேர்ந்து கொள்ளேன்‘ என்று சொல்ல, அதில் சேர்ந்து கொண்டார்.
பிறகு கல்கிக்கு மாறினார். அங்கேயும் அதிக நாள் தங்கவில்லை. சொந்தமாக, சின்ன அண்ணாமலையுடன் சேர்ந்துகொண்டு ‘வெள்ளிமணி‘ ஆரம்பித்தார். மறுபடி விகடனில் சேர்ந்தார். அதிலிருந்து தினமணி கதிர். அதிலிருந்து குங்குமம் பத்திரிகை. அதன் பின் மறுபடி சொந்தப் பத்திரிகை – சாவி. இப்படி மொத்தம் ஆரம்பித்த பத்திரிகைகளே பத்துக்கு மேல் இருக்கும்.

சாவி எழுத்தாளர்களை மிகவும் மதித்துப் போற்றிப் பாதுகாத்தார். நான் டில்லியில் இருக்கும்போதே, ‘யார் இந்த சுஜாதா?‘ என்று வாசகர் கடிதத்துக்கு என் ஃபோட்டோவைப் பிரசுரித்தார். தமிழ் எழுத்தாளர்களின் ஃபோட்டோ வருவது அப்போதெல்லாம் மிகமிக அரிது. நான் முதலில் சிறுகதைகள் எழுதியது குமுதத்தில்.

தினமணி கதிரில் சாவி அப்போது புதுசாகச் சேர்ந்திருந்தார். அதில் நான் எழுதிய முதல் கதை ‘படமல்ல நிஜம்!‘ என்ன எழுதினாலும் தவறாமல் பாராட்டிக் கடிதம் எழுதுவார். ‘ஹோனாலூலு‘ என்கிற கதையை அட்டைப்படம் போட்டு அட்டகாசமாகப் பிரசுரித்தார். நான் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த புதிதில், டிரைவ்-இன் ஓட்டலில் எனக்கும், ஓவியர் ஜெயராஜுக்கும் ஒரு பெரிய வரவேற்பு விழா வைத்து, ஜேகே என்ற கதையை அறிவித்தார். சில வருஷங்களுக்குப் பிறகு, விஜிபி கடற்கரையில் தங்கச் சாவியை ஒளித்து வைத்து வாசகர்களைத் தேட வைத்தார். பல புதுமையான காரியங்கள் செய்தார். சட்டென்று கோபித்துக் கொள்வார். சமாதானமும் அடைவார். ‘காயத்ரி‘ குறுநாவலை ஆபாசம் என்று சனாதனிகள் கடிதம் எழுத, அதை உடனே நிறுத்தச் சொல்லி எனக்குக் கடிதம் போட்டுவிட்டு, அது என்னைச் சேர்வதற்குள் ஃபோனில் சமாதானமானார்.

சாவியின் கனவு – ஏதாவது ஒரு பத்திரிகையில் பத்து லட்சம் சர்க்குலேஷனைக் காண்பது. அதை அவர் அடைந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். பத்து பத்திரிகைகள் ஆரம்பித்தார். ஒவ்வொன்றும் ஒரு லட்சமாவது விற்றன. சாவி பத்திரிகை மட்டுமின்றி பல தொழில்கள் செய்திருக்கிறார். காட்டா குஸ்தி, காஃபி கிளப், தாராசிங், கிங்காங்… இப்போதைய wwf போல மல்யுத்த ஏற்பாடுகள் என என்னவெல்லாமோ செய்திருக்கிறார்.

சாவியுடன் என் நட்பு சுமார் முப்பதாண்டுகளாகத் தொடர்ந்தது.

குறிப்பாகச் சொல்லப்போனால் அவருடைய மூத்த மகள் கல்யாணத்துக்கு அழைப்பில்லாமல் சென்றிருந்தேன். மதுரை சோமு கச்சேரி நடந்து கொண்டிருந்தது. நண்பர் ஒருவர் “இந்தப் பையன் ‘சுஜாதா‘ ங்கற பேர்ல குமுதத்தில எழுதறான்” என்று அறிமுகம் செய்த உடனே, ரிசப்ஷன் மாப்பிள்ளையை விட்டுவிட்டு என்னைப் பிடித்துக் கொண்டார்.

“நல்லா எழுதறீங்க. தினமணி கதிருக்கும் எழுதுங்களேன்” என்றார்.
“எழுதறேன் ஸார். எப்ப வேணும் ?” என்றேன்.

“நாளைக்கே ஆஃபீசுக்கு ஒரு சிறுகதை கொண்டு வாருங்களேன்” என்றார்.

அப்போதெல்லாம் ஆரம்ப எழுத்தாளர்களிடம் ஆசிரியர்கள் இந்த ரேஞ்சுக்குப் பேசமாட்டார்கள். ஆசிரியர்களை அணுகுவதே கஷ்டமாக இருக்கும். இடையே ஏகப்பட்ட உபதெய்வங்கள் இருக்கும். சாவி அவ்வளவு சரளமாக இருப்பதை வியந்து, இரவோடு இரவாக ‘அம்மோனியம் பாஸ்ஃபேட்‘ என்ற ஒரு கதை எழுதி மவுண்ட் ரோடில் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருந்த அவரது அலுவலகத்துக்கு கொண்டு சென்றேன். அங்கே விந்தன், வை.சுப்ரமண்யன், ஓவியர் தாமரை போன்றவரைச் சந்தித்த ஞாபகம் இருக்கிறது. ஓரத்தில் ஒரு சிறிய அறையில் சாவி உட்கார்ந்திருந்தார். தினமணி கதிரை மறுபடி துவக்கி லட்சம் பிரதிகளை ஒரு மாதத்திலேயே எட்டியிருந்தார். என் கதையை வாங்கிய உடனே கம்போசிங்குக்கு அனுப்பினார்.

“படிச்சுப் பாருங்க ஸார்” என்றேன்.

“தேவையில்லை. கதை வந்த அடுத்த வாரம் வாசகர் கடிதத்தில இருந்து தெரிஞ்சிடும். நல்லா இருந்தா பாராட்டுவாங்க. இல்லைன்னா திட்டுவாங்க” என்றார்.

இந்த மாதிரி அனுபவம் ஒரு ஆரம்ப எழுத்தாளனுக்கு பெரிய டானிக்.

சுஜாதா பற்றி அ.முத்துலிங்கம்…ஆனந்த விகடனில் சுஜாதா தொடர்ந்து எழுதிய ‘கற்றதும் பெற்றதும்’ மிகவும் பிரபலமானது. கட்டுரைத் த...
09/04/2026

சுஜாதா பற்றி அ.முத்துலிங்கம்…
ஆனந்த விகடனில் சுஜாதா தொடர்ந்து எழுதிய ‘கற்றதும் பெற்றதும்’ மிகவும் பிரபலமானது. கட்டுரைத் தொடர் ஒன்று படிப்பதில் வாசகர்கள் இத்தனை ஆர்வம் காட்டியது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். அப்பொழுது கணினி பாவனை ஏற்கெனவே பரவலாகிவிட்டது. நான் எந்த நாட்டில் இருந்தாலும் கட்டுரையைப் படித்துவிட்டு உடனே மின்னஞ்சலில் அவருக்கு எழுதுவேன். ஒருமுறை புவியியல் பற்றி ஏதோ கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். சுஜாதாவுக்குத் தன் அபார மேதைமையைக் காட்ட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ‘வாசகருடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், மீதியை அவராகவே தேடிப் படித்துக்கொள்வார்’ என்பது அவர் கொள்கை.

நான் அப்பொழுது புதிதாக வெளிவந்த வெகு சுவாரஸ்யமான டவா சோபெல் (Dava Sobel) எழுதிய லாஞ்சிட்யூட் (Longitude) புத்தகத்தை வாங்கி அவருக்கு அனுப்பினேன். உடனேயே அடுத்த வாரம் அதைப் படித்துவிட்டு நீளக்கோடு பற்றிய அருமையான கட்டுரை ஒன்றை எழுதினார். சுஜாதாவின் எழுத்தில் பெரும்பாலான பகுதியை மக்களிடம் கொண்டு சேர்த்தது ஆனந்த விகடன்தான்.

சுஜாதாவின் அன்பை என்னால் மறக்க முடியாது. அவருக்கு எத்தனையோ தலை போகிற காரியங்கள், இருந்தாலும் கட்டுரை அனுப்புவேன் என்று சொல்லிவிட்டார். என்னால் தொந்திரவு கொடுக்க முடியாத ஒரே நண்பர். அவர் வேண்டும்போது எழுதி அனுப்பலாம் என்றேன். தேதி ஒன்றும் வைக்கவில்லை. அவருடைய கட்டுரை இல்லாமல் தொகுதி இல்லை என்ற முடிவில் நான் இருந்தேன். அப்படியே பொறுப்பாக, தொகுப்பு வேலையை ஒருநாள் கூட தள்ளிப்போக வைக்காமல், தன் 'படிப்பின் பயணம்' கட்டுரையை அனுப்பி வைத்தார். ஒரு புத்தகத்தைப் பற்றித் தான் அவரிடம் கேட்டிருந்தேன். அவரோ ஒரு வாழ்க்கையையே எழுதி விட்டார். அப்படியொரு அதிர்ஷ்டம் எனக்கு.

சுஜாதாவின் 'படிப்பின் பயணம்' கட்டுரையைப் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்...

–---
அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவமான எழுத்துநடையும் அடையாளமும் கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் வழியே உருவாகும் உலகம் மிகுந்த நவீனத்துவமும் பரந்த அனுபவங்களும் கொண்டவை. தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

அ.முத்துலிங்கத்தால் தொகுக்கப்பட்ட இந்நூலில் (கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது) தமிழின் இருபது முன்னணி எழுத்தாளர்கள் தங்களை பாதித்த நூல்கள் குறித்தும் ஆசிரியர்கள் குறித்தும் ஆழமான பார்வைகளை முன் வைக்கிறார்கள். சமகாலத் தமிழ் இலக்கியத்திலிருந்து உலக இலக்கியம் வரை விரியும் இந்த நூல் ஒரு தலைசிறந்த இலக்கிய அறிமுகம் மட்டுமல்ல, தீவிர விமர்சனத் தொகுப்பாகவும் திகழ்கிறது.

Address

Writer Sujatha, 10 Justice Sundaram Road, Mylapore
Chennai
600004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fan club of Writer Sujatha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share