18/05/2026
"நூல்கொண்டு நிமிர்"
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்ற திருவள்ளுவரின் வாக்குக்கு இணங்க, ஒரு மனிதனை அறிவுப்பூர்வமாகவும் ஆளுமைமிக்கவனாகவும் மாற்றுவதில் புத்தகங்களுக்கு நிகர் வேறில்லை.
இன்றைய டிஜிட்டல் உலகில், குழந்தைகள் எப்போதும் கைபேசியும் கையுமாகத் திரியும் சூழலில், அவர்களைப் புத்தகங்களின் பக்கம் திசைதிருப்புவது என்பது மிக முக்கியமான சவாலாக மாறியுள்ளது.
அந்தச் சவாலைத் தகர்த்தெறிந்து, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊட்டி வளர்க்கும் நோக்கில், நேற்று மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை மாநகரசபை சிறுவர் பூங்கா அருகில் "நூல் கொண்டு நிமிர்"
நிகழ்வு அரங்கேறியது.
"அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை" அமைப்பினரால் நூல்கொண்டு நிமிர்
என்ற தலைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதையும், அவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், மாணவர்களுக்கு எதையுமே "இலவசமாக" வழங்கக் கூடாது என்பதில் அமைப்பாளர்கள் உறுதியாக இருந்தனர். உழைப்புக்கும் முயற்சிக்கும் தான் மதிப்பு என்பதை உணர்த்தும் வகையில், அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஆர்வத்தோடு வாசித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கவிக்கப்பட்டது.
இது மாணவர்களிடையே வாசிப்பு மீதான ஆர்வத்தை அதிகரித்ததோடு, உழைத்து ஈட்டும் பெருமையையும் கற்றுக் கொடுத்துள்ளது.
இன்றைய அவசர உலகில், பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்குவது என்பது பல பெற்றோர்களுக்குக் கடினமான ஒன்றாக உள்ளது. ஆனால், இந்நிகழ்வில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நித்தமும் கைபேசித் திரைகளில் மூழ்கிக் கிடக்கும் பிள்ளைகள், சிறிது நேரமாவது தங்கள் கல்விக்காகவும், ஆளுமை வளர்ச்சிக்காகவும் புத்தகங்களைக் கையில் ஏந்தியதைக் கண்டு பெற்றோர்கள் பெருமிதம் கொண்டனர். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட பெற்றோர்கள் காட்டிய இந்த முனைப்பு, சமூக மாற்றத்திற்கான ஒரு நல்ல தொடக்கமாகும்.
ஒரு சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக மாற்றுவதற்கு வித்திடும் இத்தகைய நிகழ்வுகள் காலத்தின் கட்டாயமாகும். மாணவர்களின் கல்வி, ஆளுமைத் திறன் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில், தங்களின் சுயநலமற்ற சேவையைத் தொடர்ந்து வழங்கி வரும் "அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை" அமைப்பின் நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன், இந்நிகழ்வை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்ட ஆர்வமிக்க மாணவர்களுக்கும், அவர்களுக்குத் துணையாக நின்ற பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள்.
நூல்கொண்டு நிமிர்வோம்... புதியதோர் உலகம் செய்வோம்.