செம்ம ஊரு மாப்ள

  • Home
  • செம்ம ஊரு மாப்ள

செம்ம ஊரு மாப்ள ​⛰️ காடுகளின் அமைதியிலும், மலைகளின் உயரத்திலும், அருவிகளின் இரைச்சலிலும் மனதைத் தொலைத்தவன்; நினைவுகளைச் சேகரிப்பவன். இயற்கையின் காதலன். 🌿✨

"பள்ளிகளை மட்டும் கட்டவில்லை... எதிர்காலத்தையும் கட்டினார். அணைகளை மட்டும் கட்டவில்லை... தமிழ்நாட்டின் வளத்தையும் கட்டிய...
15/07/2026

"பள்ளிகளை மட்டும் கட்டவில்லை...

எதிர்காலத்தையும் கட்டினார். அணைகளை மட்டும் கட்டவில்லை... தமிழ்நாட்டின் வளத்தையும் கட்டியெழுப்பினார்."

இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள்.

காமராஜரைப் பற்றி பேசும்போது பெரும்பாலும் கல்விப் புரட்சிதான் முதலில் நினைவுக்கு வருகிறது.

ஆனால், அவரது ஆட்சியின் மற்றொரு மகத்தான சாதனை நீர்வள மேம்பாடும், விவசாய வளர்ச்சியும் என்பதைக் காலம் கடந்தும் மறக்க முடியாது.

1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்த காமராஜர், "நீரே விவசாயத்தின் உயிர்" என்பதை உணர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அணைகள், கால்வாய்கள், நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார்.

வைகை அணை, சாத்தனூர் அணை, அமராவதி அணை, கிருஷ்ணகிரி அணை, மணிமுத்தாறு அணை, வீடூர் அணை உள்ளிட்ட பல முக்கிய அணைகள் அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன நிறைவு செய்யப்பட்டன.

புள்ளம்பாடி கால்வாய் போன்ற நீர்ப்பாசனத் திட்டங்களும் விரிவாக்கப்பட்டன.

இதன் மூலம் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று, விவசாயம் புதிய உயிர் பெற்றது.

செங்குத்தாக விழுந்த பழைய குற்றாலம் அருவியை
செதுக்கி மக்கள் குளிப்பதற்காக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்

அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய கேரள பாலக்காட்டில் அமைந்துள்ள மலம்புழா அணையும் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் (1955) நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

அது அவரது நிர்வாகக் காலத்தின் முக்கியமான நீர்வளச் சாதனைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் காமராஜரின் பார்வை அணைகளோடு முடிந்துவிடவில்லை.

"ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்" என்ற உயரிய எண்ணத்துடன் ஆயிரக்கணக்கான புதிய பள்ளிகளைத் தொடங்கி, கல்வி ஏழை மக்களின் வீட்டு வாசலுக்கே சென்றடைய வழிவகுத்தார்.

கல்வி, வேளாண்மை, தொழில், குடிநீர், மின்சாரம்—ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அடித்தளங்களை ஒரே நேரத்தில் வலுப்படுத்திய தொலைநோக்குத் தலைவர் அவர்.

இன்று நாம் பெருமையாகப் பயன்படுத்தும் பல அணைகளிலும், வளமாக விளையும் வயல்களிலும், கல்வி கற்ற தலைமுறைகளிலும் காமராஜரின் பார்வையும் உழைப்பும் இன்னும் உயிருடன் வாழ்கின்றன.

அதிகாரத்தைச் சேர்க்க அரசியலுக்கு வரவில்லை; மக்களின் வாழ்க்கையை உயர்த்தவே அரசியலைத் தேர்ந்தெடுத்தார்.
கல்விக்கு ஒளி தந்தவர்...

விவசாயத்திற்கு நீர் தந்தவர்...
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வேரூன்றிய அடித்தளம் அமைத்தவர்...

அவர்தான் பெருந்தலைவர் காமராஜர்.

அவரது பிறந்தநாளில், அந்த மாபெரும் மக்கள் தலைவருக்கு நமது பணிவான புகழ்வணக்கங்கள். 🌹





குற்றாலம் போலாமா என்று சொன்னால் உற்சாகம் வராதோர் உண்டோ தென்காசி சுற்றுவட்டார பகுதி இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கே குற்...
14/07/2026

குற்றாலம் போலாமா
என்று சொன்னால் உற்சாகம் வராதோர் உண்டோ

தென்காசி சுற்றுவட்டார பகுதி இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கே

குற்றாலம் பாபநாசம் அருவிகளில் குளித்து மகிழ்வதுதான் அருவிகளுக்கு பஞ்சமில்லாத மாவட்டம் எங்கள் தென்காசி மாவட்டம்

புலியருவி
பழைய குற்றாலம்
மெயின் அருவி
ஐந்தருவி
சிற்றருவி

என்று பெரிய அருவிகளும்
அருகருகே இருக்கும் அணைக்கட்டுகளில் சிற்றோடைகள் சிற்றருவிகளும் தென்காசி நெல்லை மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு வர பிரசாதம்

எத்தனை அருவிகள் இருந்தாலும் குற்றாலம் போல் ஒரு உற்சாகம் சந்தோசம் எங்கும் வராது

(1)மெயினருவி
மெயினருவி இதுதான் எல்லாருக்கும் பிடித்தமான அருவி எந்த நேரமும் சென்று குளிக்கலாம்

தென்காசி பகுதி இளைஞர்களுக்கு மெயினருவியில் குளிப்பதைவிடவும் விருப்பமான இடமென்றால் அது மெயினருவி மேல் இருக்கும் செண்பகாதேவி அருவி
தேனருவி தான்

குற்றாலம் மலைமேல் 3கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும்
மலைமேல் நடக்க நடக்க உற்சாகம் தொற்றிக்கொள்ளும் செல்லும் வழியில் இளைஞர்களின் ஆட்டமும் பாட்டமும் விசிலும் முதியோர்களையும் தொற்றிக்கொள்ளும்

அதிலும் குறிப்பாக மதுரை விருதுநகர் மாவட்ட பசங்க பண்ணும் அலப்பறைக்கு அளவே இருக்காது

மலை மேல் நடக்க முதலில் வருவது சிற்றருவி அதை தாண்டி மேல நடந்தால்..

வரும் தடாகம் ராதா குண்டம் என்று அழைக்கப்படும் இங்கு டைவ் அடித்து குளிக்க அப்படி ஒரு ஆனந்தம்

ராதாகுண்டத்தில் குளித்துவிட்டு கரையேறினால்
அருகே சுடசுட மிளகாய் பஜ்ஜியும் முட்ட போண்டாவும் நம் மூக்கை துளைக்கும் சாப்பிடாமல் நகர மனம் வராது
சூடாக சில பஜ்ஜி போண்டாக்களை உள்ள தள்ளிட்டு..

நடந்தால் அடுத்து வருவது செண்பகா தேவி அருவி 40அடி உயரத்தில் பேரிரைச்சலோடு தண்ணீர் விழும் பார்க்க பார்க்க மனம் லயித்துவிடும் அருவியின் இரு புறங்களிலும் ஆண்கள் டைவ் அடித்து குளிப்பார்கள் உற்சாக மிகுதியில் பெண்களில் சிலரும் டைவ் அடித்துகுளிக்க இளைஞர்களின் விசில் சத்தம் காதை பிளக்கும்

செண்பகாதேவி அருவிக்கு 3கிலோ மீட்டருக்கு மேல் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருப்பது தேனருவி
கடினமான பாதை பெண்கள் இங்கு வருவது மிக அபூர்வம்

இரண்டு பெரிய மலைகளை பிளந்து மலைகளுக்கு நடுவில் அருவி கொட்டும் தண்ணீர் அவ்வளவு சுத்தமா இருக்கும் கண்ணாடி போல மலைகளின் இரு பக்கமும் மிகப்பெரிய

அளவில் காட்டுதேனீக்கள் கூடு அதிகளவில் இருக்கும் அதனாலே தேனருவி என்ற பேர் உண்டு என்று சொல்வார்கள் அருவிக்கு செல்லும் முன் நம் முகத்தில் அறையும் தூவானத்தை கடப்பது அவ்வளவு எளிதல்ல உடல் குளிரில் நடுநடுங்கிவிடும் 10நிமிடம் அந்த குளிர்நீரில் குளிப்பதே அதிகமாய் தோன்றும்

குளித்துவிட்டு கையோடு கொண்டுவந்த

நான்கைந்து புரோட்டாக்களை சால்னா ஊத்தி பிச்சு போட்டு சாப்பிட்டால் அதை விட இன்பம் வேறென்ன என்பீர்கள்

குளித்து விட்டு திரும்பும்போது நம் உடல் அடையும் புத்துணர்ச்சி சொல்லிமுடியாது உடலும் மனதும் இளமை பருவத்துக்கு திரும்பியது போலிருக்கும்........ நிற்க்க

இவையெல்லாம் 2kகிட்ஸ்க்கு முந்தையவர்கள் அனுபவித்தவை இப்போது மெயினருவிக்கு மெல் செல்ல வனத்துறை தடை போட்டுவிட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது

இப்பொது குற்றாலக்குளியல் என்றாலே கடுப்பாக ஆகிவிட்டது 5நிமிட குளியலுக்கு அரைமணிநேரம் சீசன் காலங்களில் வரிசையில் நிற்க்க வேண்டிய சூழ்நிலை

ஒரு சில சமூகவிரோதிகள் செய்த செயலால் ஒட்டுமொத்த மக்களுக்கும் தண்டனை கொடுத்து விட்டது வனத்துறை


இப்பொது குற்றாலத்தின் செண்பகாதேவி அருவி தேனருவி பற்றிய செய்திகளை வாசிக்கும் போது மனம் பழைய நினைவுகளை நினைத்து கனத்து போய்விடுகிறது

#குற்றாலம்




மாஞ்சோலை எஸ்டேட் – ஒரு நூற்றாண்டு வரலாறு… இன்று வனத்துறையின் கட்டுப்பாட்டில்!திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி ...
13/07/2026

மாஞ்சோலை எஸ்டேட் – ஒரு நூற்றாண்டு வரலாறு… இன்று வனத்துறையின் கட்டுப்பாட்டில்!

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள மாஞ்சோலை,

இன்று வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி.

ஆனால் அதன் பின்னால் சுமார் ஒரு நூற்றாண்டு வரலாறு மட்டுமல்ல, பல நூற்றாண்டுகள் பழமையான சிங்கம்பட்டி ஜமீனின் வரலாறும் இணைந்துள்ளது.

சிங்கம்பட்டி ஜமீன், தென்பாண்டி நாட்டின் பழமையான ஜமீன்களில் ஒன்றாகும்.

மேற்கு தொடர்ச்சி மலைகளின் பரந்த வனப்பகுதிகளையும், தாமிரபரணி ஆற்றின் மேல்பகுதி நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் தனது நிர்வாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் இந்த ஜமீன் முக்கியமான நில ஆளுமையாக விளங்கியது.

அந்த வகையில், மாஞ்சோலை பகுதியும் சிங்கம்பட்டி ஜமீனின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்தது.

1929-ஆம் ஆண்டு நிதிச் சிக்கலால், சுமார் 8,000 ஏக்கர் நிலம் Bombay Burmah Trading Corporation (BBTC) நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது.

1948-ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட்ஸ் (ஜமீன்தாரி ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாற்றம்) சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, ஜமீன்தாரி முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டது.

இதனால் சிங்கம்பட்டி உள்ளிட்ட ஜமீன்களின் நிர்வாக உரிமைகள் அரசிடம் சென்றன.

இருப்பினும், ஏற்கனவே செய்யப்பட்டிருந்த BBTC நிறுவனத்தின் 99 ஆண்டு குத்தகை தொடர்ந்து நடைமுறையில் இருந்தது.

அதன் பின்னர் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி போன்ற பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

பல தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கே வாழ்ந்து உழைத்தனர். அவர்களின் வாழ்க்கையும் அந்த மலைகளோடு பின்னிப் பிணைந்திருந்தது.

1999-ஆம் ஆண்டு தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தின் போது நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். அந்த நிகழ்வு மாஞ்சோலையின் வரலாற்றில் அழியாத காயமாக உள்ளது.

1929-ல் தொடங்கிய 99 ஆண்டு குத்தகை 2025-ஆம் ஆண்டில் முடிவடைந்தது. அதன் பிறகு அந்தப் பகுதி தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

தற்போது அந்த நிலப்பரப்பை மீண்டும் இயற்கை வனமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் நோக்கம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர் வளத்தையும், வனச் சூழலையும் பாதுகாப்பதாகும்.

ஒருபுறம் வனப் பாதுகாப்பு, மறுபுறம் பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம்—இந்த இரண்டிற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது இன்றும் ஒரு முக்கியமான சமூகக் கேள்வியாக உள்ளது.

மாஞ்சோலை என்பது ஒரு மலை அல்ல...

அது சிங்கம்பட்டி ஜமீனின் வரலாறு,

ஜமீன்தாரி ஒழிப்பு, தொழிலாளர் வாழ்க்கை, இயற்கை, போராட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் சுமந்து நிற்கும் ஒரு வரலாற்றுச் சின்னம்.

#மாஞ்சோலை #திருநெல்வேலி #சிங்கம்பட்டிஜமீன் #தேயிலைஎஸ்டேட் #மேற்குத்தொடர்ச்சிமலை #வரலாறு #தமிழ்நாடு
#செம்ம_ஊரு_மாப்ள

உங்களுக்கு தெரியுமா?? பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவிலும் அணை கட்டபட்டுள்ளது அந்த அணைதான...
12/07/2026

உங்களுக்கு தெரியுமா??

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவிலும் அணை கட்டபட்டுள்ளது

அந்த அணைதான் கேரளாவின் அரிசிகிண்ணம் என்றழைக்கப்படும்
பாலக்காட்டில் உள்ள
மலம்புழா அணை ...


​பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் திறக்கப்பட்டது..

வாருங்கள் அந்த வரலாறை பார்ப்போம்

​பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இந்த அணையின் வரலாறு பெருமைக்குரியது!

​✅
1914-ஆம் ஆண்டே திட்டமிடப்பட்ட இந்த அணையின் கட்டுமானப் பணிகள், மார்ச் 27
, 1949 அன்று அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் பக்தவச்சலம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கின.

அன்றைய மதராஸ் மாகாணத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்ட மிகச்சிறந்த நீர்ப்பாசனத் திட்டம் இது.

​✅ வரலாற்று தருணம்:
பல ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகு, அக்டோபர் 9, 1955 அன்று,

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் இந்த அணையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து, பாலக்காடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தார்.

​1956-ல் மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை, மதராஸ் மாகாண (இன்றைய தமிழக) அரசின் நிர்வாகத்தில் ஒரு பொற்கால நீர்ப்பாசனத் திட்டமாக மலம்புழா திகழ்ந்தது.

நம் முன்னோர்களின் கடின உழைப்பிற்கும், பெருந்தலைவரின் நிர்வாகத் திறனுக்கும் ஒரு அழியாத சாட்சி இந்த அணை! 🏞️✨

(ஆனால் இன்றைக்கு கேரளாவிடம் தண்ணீருக்கு கெஞ்சுகிறோம்)

​அடுத்தமுறை பாலக்காடு பக்கம் சென்றால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள்!

இந்த அணை கட்டுமானத்திற்காக உயிர்கொடுத்த

நம் முன்னோர்களின் உழைப்பின் வரலாறை பார்த்து வாருங்கள்

​ #அணைகளின்அரசன்


TOP Comments

கொஞ்சம் பெரிய கட்டுரை தான் தள்ளி விட்டு போகாதீர்கள்எங்கள் மாவட்ட மனகுமுறலை கொஞ்சம் கேளுங்கள்  செண்பகவல்லி அணை... முல்லைப...
12/07/2026

கொஞ்சம் பெரிய கட்டுரை தான் தள்ளி விட்டு போகாதீர்கள்
எங்கள் மாவட்ட மனகுமுறலை கொஞ்சம் கேளுங்கள்

செண்பகவல்லி அணை... முல்லைப் பெரியாறு அளவுக்குப் பேசப்படாத ஓர் அணையின் கதை!

தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. காவிரியாக இருந்தாலும் சரி,

முல்லைப்பெரியாறு அணையாக இருந்தாலும் சரி பக்கத்து மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்துக்குள் தண்ணீர் வருவது கடினம்தான்.

மன்னராட்சி காலத்தில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட நீராதாரங்கள், இன்று அரசியல்வாதிகளின் 'தண்ணீர் அரசியலில்' தாகத்தோடு கிடக்கின்றன. இது வெறும் அணை குறித்த கட்டுரை அல்ல, தென்தமிழகத்தின் தாகத்தின் குரல்!

அரசுகளின் அலட்சியத்தால் ஒருதலைமுறை மறந்துபோன தென்தமிழகத்தைச் செழிக்க வைத்த ஓர் அணைக்கட்டு மறக்கடிக்கப்பட்ட வரலாற்றைத்தான் பார்க்கப்போகிறோம்.

தென்தமிழகத்தின் முக்கிய மாவட்டமான தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் இருந்ததுதான்

செண்பகவல்லி தடுப்பணை. 200 வருடங்களுக்கு மேலாக மூன்று மாவட்ட மக்களின் பாசனத்துக்கு, குடிநீருக்கு ஆதாரமாய் இருந்துவந்த இந்தத் தடுப்பணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 55 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

மன்னர்களின் மக்கள் நேசம்!

இன்றைய முல்லைப்பெரியாறு அணைக்காக தமிழகம் மற்றும் கேரளாவும் அடித்துக்கொள்வது உலகம் அறிந்து ஒன்று
ஆனால் இந்த முல்லைப்பெரியாறு அணைக்கே நதிமூலம் சிவகிரி மலைகள் என்றால் பலருக்கும் தெரியாது. தமிழகம், கேரளத்தை ஒன்றிணைக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சிவகிரி.

அடர் வனப்பகுதியான இங்கு ஆண்டு முழுவதும் வற்றாத நீர் பெருக்கெடுக்கும். கடலில் வீணாகக் கலந்துவந்த இந்த நீரை மக்களுக்குப் பயன்படுத்தும் நோக்கில்

கிபி 1700 காலவாக்கில் சிவகிரி ஜமீன் அன்றைய திருவிதாங்கூர் கேரளா மன்னரின் உதவியை நாடி ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறார். அந்த ஒப்பந்தத்தின்படி மேற்கே கன்னிமர் ஆற்றில் ஓடி 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் வழியாக முல்லைப் பெரியாறுக்குச் சென்று கலந்த நீர் கிழக்கு முகமாகத் திருப்பப்பட்டு செண்பகவல்லி கால்வாய் ஏற்படுத்தப்பட்டது
நதிநீர் இணைப்பைப் பற்றி நாம் தற்போது பேசிவரும் நிலையில் அன்றைய காலகட்டத்தில் காட்டுப்பகுதியில் கிடைத்த கல், மண்ணைக் கொண்டே நதிநீரைத் திருப்பிவிட்டு தங்கள் மக்களின் வாழ்வில் செழிப்பை ஏற்படுத்தினார் சிவகிரி ஜமீன்.

200 ஆண்டுக்கால வற்றாத ஜீவநதி!

1773-ம் ஆண்டு ஜமீனின் முயற்சியால் வாசுதேவநல்லூர் தலையணைப் பகுதிக்கு மேற்கே செண்பகவல்லி கால்வாய் 40 சதுர கி.மீ பரப்பளவில் உருவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகும் தேவியாறு, பேச்சிகோவிலாறு, உள்ளாறு, ஈச்சன் ஓடை, சாகநதி, நிச்சநதி உள்ளிட்ட சிற்றாறுகள் இந்த அணைக்குத் தண்ணீரை தாரை வார்த்தது.

இந்தக் கால்வாய் தீர்த்தபாறை என்னும் பகுதியில் அமைக்கப்பட்டு அங்கிருந்து மூன்று மாவட்டங்களில் உள்ள 25,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பெற்று வந்தன. 1603 அடி உயரத்திலும் 928 அடி தூரத்திற்கும் சிமென்ட் இல்லாமல் சுண்ணாம்புக் கற்களால் அணையின் சுவர் கட்டப்பட்டது.

இதன் நீளம் 2531 அடி. அகலம் 10 அடி. உயரம் 15 அடியாகும். இந்த அணையிலிருந்து அகாலத்தில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், வெம்பக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதியிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெற்றன.

ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதியாய்ப் பெருக்கெடுத்து வந்த செண்பகவல்லி அணையில் 1950-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
இதில் தடுப்பணையின் ஒருபகுதியில் உடைப்பு ஏற்படக் கிழக்கு நோக்கிப் பாயவேண்டிய நீர் மேற்கு நோக்கி முல்லைப்பெரியாற்றில் கலந்துவிட்டது. ஆனால் இந்த உடைப்பை அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியில் தமிழக அரசு சீரமைத்தது.

ஆனால் இயற்கையின் கோர தாண்டவம் சும்மா இருக்கவில்லை. 1965-ம் ஆண்டே மீண்டும் பெருமழை பெய்ய தடுப்புச் சுவர் மீண்டும் இடிந்துவிட்டது. இதனால் தண்ணீர் வரத்து மறுபடியும் முல்லைப் பெரியாறுக்கே சென்றது.

தண்ணீர் அரசியல்!

1985-ம் ஆண்டு, தடுப்பணை அமைந்திருக்கும் பகுதி இடுக்கி மாவட்டத்தில் இருந்ததால் கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தினார் எம்ஜிஆர்

அதன்பயனாக கேரள அரசு அணையை மீண்டும் புதுப்பித்து தருவதாக அதற்காக கண்டிஷன் ஒன்றையும் விதித்தது.

தடுப்பணையைப் புதுப்பிக்கச் செலவாகும் 10.30 லட்ச ரூபாயில் பாதி பணத்தைத் தமிழக அரசு தர வேண்டும் என்பதுதான் அந்த கண்டிஷன்.

கேரள அரசின் நிபந்தனைப்படி தமிழக அரசு சார்பில் 5.15 லட்சம் பணமும் கொடுக்கப்பட்டது. ஆனால் கொடுக்கப்பட்ட பணமும், திட்டமும் கிடப்பில் போடப்பட்டன.


கடைசியாக 30 வருடங்கள் கழித்து அச்சுதானந்தன் தலைமையிலான கேரள அரசு 2006-ம் ஆண்டு தமிழக அரசுக்கு இந்த விவகாரத்தில் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், `இது புலிகள் வாழும்பகுதி. இங்கு தடுப்பணை கட்டினால் வனவிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்" எனக் கூறி தடுப்பணை கட்டக்கொடுத்த தொகையை அரசுக்கே திருப்பி அனுப்பியது

விவசாயிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்குக் கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் எனஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது கூடுதல் சோகம்.

இந்த அணையின் உடைப்பு என்பது 70 மீட்டரிலிருந்து 100 மீட்டருக்குள்தான். தற்போதைய காலகட்டத்தில் இதற்கு ஆகும் செலவு 10 கோடி மட்டுமே.

பல கோடி கொடுத்து பாலங்களைக் கட்டும், மகளிர் உரிமை தொகை என ஆயிரகணக்கான கோடிகள் வாரியிரைக்கும் அரசுகள்
இதற்குச் செலவு செய்ய மறுப்பது ஏன்?

உயர் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் அணையை கட்ட கேரள அரசு முன்வரவில்லை. தமிழக அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை.

செல்வச் செழிப்பாக முப்போகம் விளைந்த எங்கள் பூமியில் இப்போது குடிநீருக்கே பஞ்சம் நிலவிவருகிறது. காலத்தின் கொடுமையா அல்லது அரசாங்கத்தின் அலட்சியமா எனத் தெரியவில்லை
இனியாவது அரசாங்கங்கள் முன்வருமா எனவும் தெரியவில்ல

மறத்துப் போன மக்கள் நேசம்!

அரிசி, இறைச்சி, காய்கறி, பால், மணல், செங்கல், மின்சாரம், வாழைப்பழங்கள், சிமென்ட் என அனைத்தையும் தமிழகத்தை நம்பியே வாழ்நாளைக் கழிக்கும் கேரள மாநிலம், வீணாய்க் கடலில் கலக்கும் பல நதிகளின் நீரைத் தமிழகத்துக்கு தராமல் இருப்பது என்ன வகை நியாயமோ?

மன்னர்கள், ஜமீன்தார்கள் காலத்திலிருந்த மக்கள் நேசம், மனித நேயம் போன்றவை மக்களாட்சி காலத்தில் இல்லாமல் போனது பெரும் சோகம்!

"எங்கள் நிலம் வறண்டால், எங்கள் கண்ணீர் மட்டும் அல்ல... எதிர்காலச் சந்ததியின் வாழ்வாதாரமும் கருகிப்போகும். உறங்கும் அதிகார வர்க்கமே, செண்பகவல்லி அணையை மீட்டெடுங்கள்!"




#சிவகிரி

ஒருநாள் தான் லீவு அதுல ஒரு ஹில்ஸ்ஸ்டேஷன் சுத்திபாத்தா எப்படி இருக்கும்னு நினைக்கிறிங்களா வாங்க போலாம் பொன்முடிக்கு பொன்ம...
11/07/2026

ஒருநாள் தான் லீவு அதுல ஒரு ஹில்ஸ்ஸ்டேஷன் சுத்திபாத்தா எப்படி இருக்கும்னு நினைக்கிறிங்களா

வாங்க போலாம் பொன்முடிக்கு

பொன்முடி (Ponmudi) கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான மற்றும் புகழ்பெற்ற மலைப்பிரதேசமாகும்.

பைக் பயண ஆர்வத்திற்கும், இயற்கை ரசனைக்கும் இது ஒரு மிகச்சிறந்த இடமாகும்.

பொன்முடி செல்லும் பாதை அதன் 22 கொண்டை ஊசி வளைவுகளுக்கு (Hairpin Bends) பெயர் பெற்றது. பைக் ஓட்டுபவர்களுக்கு இது ஒரு சவாலான மற்றும் உற்சாகமான அனுபவத்தைத் தரும்.

​மூடுபனி மற்றும் குளுமை: வருடம் முழுவதும் இதமான காலநிலையைக் கொண்ட இந்த இடம், மேகங்கள் மலைகளைத் தழுவிச் செல்லும்

​இயற்கை காட்சிகள்: பசுமையான தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் கண்ணாடி போல தெளிவான ஆற்றுநீர்
மற்றும் மேகமூட்டமான மலைச் சிகரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்.

​2. முக்கிய இடங்கள்
​கோல்டன் வேலி (Golden Valley): கல்லார் நதிக்கரையில் அமைந்துள்ள இது, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்கும் உகந்த இடமாகும்.

​மீன்முட்டி நீர்வீழ்ச்சி (Meenmutty Waterfalls): பொன்முடி செல்லும் வழியில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி, இங்கு குளிக்க முடியாது
2 km மலையேறி அருவியை பார்க்கணும் இங்கு (Trekking) மிகவும் பிரபலம்.

​ நம்ம ஊரான தென்காசியிலிருந்து பொன்முடி செல்ல சுமார் 3.30
மணிநேரம் ஆகலாம் (சுமார் 110 கி.மீ).


​அனுமதி நேரம்: காலை 8 மணி முதல் மாலை .4 மணி வரை

​ நீங்கள் பைக் ரைடு செல்ல விரும்புபவர் என்றால், இந்த மலைப்பாதை பயணத்தை நிச்சயம் ரசிப்பீர்கள்.

உங்களின் அடுத்த பயணத்திற்கு பொன்முடி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.







TOP Comments

தென்காசி to அம்பாசமுத்திரம் சாலையில் பயணித்தால் பார்க்க வேண்டிய ஒரு ஆலயம்  சிவசைலநாதர் திருக்கோயில்! 🌿🙏​தென்காசி மாவட்டத...
11/07/2026

தென்காசி to அம்பாசமுத்திரம் சாலையில் பயணித்தால்
பார்க்க வேண்டிய ஒரு ஆலயம்

சிவசைலநாதர் திருக்கோயில்! 🌿🙏

​தென்காசி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில்,

கடனா நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு புண்ணிய பூமி தான் இந்த சிவசைலம் அருள்மிகு சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் திருக்கோயில்.

​சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட இந்த ஆலயம், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு, பல தலைமுறைகளாகப் பக்தர்களைக் கவர்ந்து வரும் ஒரு அற்புதத் தலம்.

​இக்கோயிலின் தனிச்சிறப்புகள்:

​✨ சுயம்பு லிங்கம்: சிவசைலநாதர் ஒரு சுயம்பு லிங்கம். லிங்கத்தின் பின்புறம் சடைமுடி போன்ற ரேகைகள் இருப்பதால், இவரை "சடையப்பர்" என்று அழைக்கிறார்கள்

நான்கு திசைகளிலிருந்தும் இறைவனை தரிசிக்கலாம் என்பது இக்கோயிலின் கூடுதல் சிறப்பு.

​✨ அம்பாள் பரமகல்யாணி: பொதுவாக பாண்டிய நாட்டு ஆலயங்களில் இரு கரங்களுடன் காட்சி தரும் அம்பிகை, இங்கு நான்கு கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

இவருக்குத் திருவிழாக் காலங்களில் தங்கக் கைக்கடிகாரம் அணிவிப்பது இக்கோயிலின் தனித்துவமான வழக்கம்.

​✨ நந்தியின் மர்மம்: இக்கோயிலின் நந்தி சிலை மிகவும் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

அது உயிர்பெற்று எழுந்துவிடுமோ என்ற பயத்தில், சிற்பி அதன் முதுகில் தட்டியதாகவும், அதன் தழும்பு இப்போதும் நந்தியின் முதுகில் காணப்படுவதாகவும் ஐதீகம் நிலவுகிறது.

​✨ வரலாற்றுப் பின்னணி: சுதர்சன பாண்டிய மன்னன் தன் பிள்ளை வரம் வேண்டி வழிபட்ட தலம் இது. அப்பர் பெருமானால் போற்றப்பட்ட தேவார வைப்புத் தலமாகவும் இது விளங்குகிறது.

​தென்காசிக்கு அருகில் ஆழ்வார்க்குறிச்சியிலிருந்து கடனா நதி அணை செல்லும் வழியில் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயம்,

ஆன்மீகத்திர்க்கும், கலைநயம் மிக்க சிற்பங்களுக்கும் பெயர் பெற்றது.
​நீங்கள் தென்காசி பக்கம் வந்தால், தவறவிடக்கூடாத அற்புதமான தலம் இது!

​ #சிவசைலம் #தென்காசி #சிவசைலநாதர் #ஆன்மீகம் #தமிழககோயில்கள் #தென்காசிசுற்றுலா
சிவசைலம் சிவசைலநாதர் திருக்கோயில்! 🌿🙏

Address

7/65 , Oothu Estate, Oothu Post , Manjolai Tirunelveli. 627427

Website

Alerts

Be the first to know and let us send you an email when செம்ம ஊரு மாப்ள posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your establishment to be the top-listed Arts & Entertainment?

Share