16/08/2026
இலங்கை மண்ணில் இசை வெளியீடு காணும் இந்தியத் தமிழ் திரைப்படம் ‘நல்லபடம்’!
இந்தியத் தமிழ் சினிமாவுக்கும் இலங்கைத் தமிழ் ரசிகர்களுக்கும் இடையிலான கலைத் தொடர்பில் புதியதொரு நிகழ்வாக, இந்தியத் தமிழ் திரைப்படமான ‘நல்லபடம்’ படத்தின் இசை வெளியீடு இலங்கையில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொழும்பு Port City-யில் நடைபெறும் ‘World of Ravan’ இசைத் திருவிழாவின் பிரமாண்ட மேடையில் ‘நல்லபடம்’ திரைப்படத்தின் பாடல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தியத் தமிழ் திரைப்படம் ஒன்றின் இசை வெளியீடு இலங்கையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையவுள்ளது.
Harish Cinemas சார்பில் A. Alagu Pandian தயாரித்துள்ள இப்படத்தை, ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய C. Prabhuram இயக்கியுள்ளார். Dr. A. Harish கதாநாயகனாகவும், Dhanalakshmi கதாநாயகியாகவும் நடித்துள்ளதுடன், Mottai Rajendran, Kalki Raja, Rama மற்றும் Priyadarshini உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘நல்லபடம்’ படத்தின் இசையை Sakishna Xavier கவனித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான, ‘அய்யோ சாமி’ பாடலின் மூலம் பரவலாக அறியப்பட்ட பொத்துவில் அஸ்மின் இப்படத்திற்கான பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தில் Velmurugan, Arulpragasam, Punniya Selva, Gayathri Rajiv மற்றும் Shashank ஆகியோர் தங்களது குரல்களைப் பதிவு செய்துள்ளனர்.
மது தொடர்பான சமூகக் கருப்பொருளை மையமாகக் கொண்டு, நகைச்சுவை, காதல், உணர்வு மற்றும் சமூகச் செய்தி ஆகியவற்றை இணைத்து ‘நல்லபடம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் இலங்கை இசை வெளியீட்டை முன்னிட்டு இந்தியத் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 22ஆம் தேதி கொழும்பில் ஒலிக்கவுள்ள ‘நல்லபடம்’ பாடல்கள், இந்தியத் தமிழ் சினிமாவுக்கும் இலங்கைத் தமிழ் கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் விரிவுபடுத்தும் நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#நல்லபடம்